இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஒருநாள் மற்றும் டி20 தொடர் இந்த வாரம் தொடங்குகிறது. ஒருநாள் தொடரை முன்னிட்டு விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா மீண்டும் இந்திய அணியில் களமிறங்க உள்ளனர். டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து இருவரும் ஓய்வை அறிவித்துள்ள நிலையில், மீண்டும் இருவரையும் இந்திய அணியில் பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். இந்த இருவருக்கும் ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெறும் 3 ஒருநாள் போட்டிகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. காரணம், 2027 உலகக் கோப்பை வரை அவர்கள் இந்திய அணியில் இடம் பெறுவதற்கு பார்ம் மிகவும் முக்கியம். அவர்களின் செயல்திறன் அடிப்படையில் மட்டுமே இடம் உறுதி செய்யப்படும் என்று தேர்வுக்குழு ஏற்கனவே தெரிவித்துள்ளது.
Add Zee News as a Preferred Source
டி20 அணியில் விராட், ரோஹித்?
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி பெர்த் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டிக்கான டிக்கெட்கள் அனைத்தும் ஏற்கனவே விற்று தீர்ந்துள்ள நிலையில், போட்டி நடைபெறும் அன்று மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் போட்டி நடைபெறாமல் போவதற்கும், அப்படியே நடைபெற்றாலும் ஓவர்கள் குறைக்கப்பட்டு டி20 வடிவில் போட்டிகள் நடைபெற சாத்தியம் இருப்பதாகவும் கூறப்படுகிறது. அப்படி நடந்தால், 2024 டி20 உலக கோப்பைக்கு பிறகு அணியில் இருந்து விலகிய கோலி-ரோஹித் இருவரும் மீண்டும் டி20 போன்ற ஒரு சர்வதேச போட்டிகளில் இந்தியாவுக்காக பேட் செய்யும் வாய்ப்பு உருவாகலாம். இதனால் வரும் ஞாயிற்றுகிழமை நடைபெறும் போட்டிக்காக ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.
விராட் கோலி, ரோஹித் சர்மா மீது அழுத்தம்!
தேர்வாளர்களின் சமீப பேச்சுக்கள் விராட், ரோஹித் 2027 ஒருநாள் உலகக்கோப்பை அணியில் இடம் பெறுவது சந்தேகம் என்ற மனநிலையை உருவாக்கி உள்ளது. ஏனெனில் அவர்களது இடத்திற்கு அபிஷேக் சர்மா, திலக் வர்மா, ஜெய்ஸ்வால் போன்ற இளம் வீரர்கள் நல்ல ஃபார்மில் காத்திருக்கிறார்கள். ஆஸ்திரேலியா தொடருக்கு பிறகு நவம்பர் இறுதியில் தென்னாப்பிரிக்கா, ஜனவரியில் நியூஸிலாந்து அணிகளுக்கு எதிராக இந்திய அணி ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது.
கோலி-ரோஹித் என்ன செய்ய வேண்டும்?
பெர்த் போன்ற இடங்களில் ஹேசில்வுட், ஸ்டார்க் ஆகியோருக்கு எதிராக க்ரீஸில் நிலைத்து நின்று ஆட வேண்டும். கடந்த ஆண்டு நடைபெற்ற டெஸ்ட் தொடரில் இருவரும் மோசமாக விளையாடி இருந்தனர். பவர்-பிளே முடியும் வரை ரோஹித் சர்மா ஆட்டமிழக்காமல் இருந்தால் அவர் ரன்கள் அடிக்க வாய்ப்புள்ளது. 4 மற்றும் 5வது ஸ்டெம்பில் பந்துகளை வீசி விராட் கோலியை அவுட் எடுக்க ஆஸ்திரேலிய பவுலர்கள் திட்டம் வைத்திருப்பார்கள். அதனை விராட் கோலி முறியடிக்க வேண்டும். ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இடம் பெற்றுள்ளார். ரோஹித் சர்மாவிற்கு பிறகு அவரை ஓப்பனிங் பேட்டராக பிசிசிஐ பார்க்கிறது. இந்த தொடரிலும் அவருக்கு ஒரு வாய்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய ஒருநாள் அணி
ஷுப்மன் கில் (கேப்டன்), ரோஹித் சர்மா, விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர் (துணை கேப்டன்), அக்சர் படேல், கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர்), நிதிஷ் குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், ஹர்ஷித் ராணா, முகமது சிராஜ், அர்ஷ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா, துருவ் ஜூரல் (விக்கெட் கீப்பர்), யஷஸ்வி ஜெய்ஸ்வால்.
About the Author
RK Spark