கொல்கத்தா,
மேற்கு வங்காள மாநிலத்தின் துர்காபூரில் உள்ள ஷோபாபூர் அருகே தனியார் மருத்துவ கல்லூரி மருத்துவமனை உள்ளது. இதில், ஒடிசா மாநிலம் ஜலேஸ்வர் பகுதியை சேர்ந்த 23 வயது மாணவி ஒருவர் 2-ஆம் ஆண்டு மருத்துவ படிப்பை படித்து வருகிறார். இந்த நிலையில், கடந்த 10-ந்தேதி இரவு 8.30 மணியளவில் அந்த மாணவி ஆண் நண்பர் ஒருவருடன் மருத்துவமனை வளாகத்தில் இருந்து வெளியே வந்தபோது, திடீரென வந்த நபர் ஒருவர், அந்த மாணவியை மருத்துவமனை கட்டிடத்தின் பின்புறத்திற்கு இழுத்து சென்று, பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
ஆனால் மாணவி, கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி உள்ளார் என பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தில் சந்தேகத்தின்பேரில் 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் ரியாஸ், பிர்தவுஸ் ஷேக், அப்பு பாவ்ரி, ஷேக் சொபிகுல் மற்றும் ஷேக் ரியாஜுதீன் என அடையாளம் காணப்பட்டு உள்ளனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த மாணவி மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டு உள்ளது. பாதிக்கப்பட்ட மாணவியின் நண்பரான வாசிப் அலியிடம் போலீசார் தொடர்ந்து விசாரித்தனர். இதில், அவருக்கு எதிராக பல்வேறு சான்றுகள் கிடைத்து உள்ளன என அவர்கள் தெரிவித்தனர்.
பாதிக்கப்பட்ட மாணவியின் தந்தை அளித்த புகாரின் பேரில் அலியின் பெயர் வழக்கில் சேர்க்கப்பட்டு உள்ளது. அவரை போலீசார் கோர்ட்டில் இன்று ஆஜர்படுத்துகின்றனர். சம்பவத்திற்கு பின்னர், அலியுடன் மாணவி விடுதிக்கு திரும்பியுள்ளார். முதல் நாளில் இருந்து அவரை போலீசார் கண்காணித்ததுடன், கடந்த 4 நாட்களாக அவரிடம் விசாரணையும் நடந்தது. இந்நிலையில், அவர் கைது செய்யப்பட்டார்.
இதனால் இவர் வழக்கில் கைது செய்யப்பட்ட 6-வது நபர் ஆவார். 6 பேரில், ஒருவர் கல்லூரியின் முன்னாள் பாதுகாவலர் ஆவார். மற்றொரு நபர் மருத்துவமனையின் ஊழியர் ஆவார். இன்னொருவர் உள்ளாட்சி அமைப்பில், தற்காலிக ஊழியராக உள்ளார். மற்றொருவர் வேலையின்றி திரிந்து வருகிறார்.
இந்த வழக்கில் மாணவியை ஒருவரே பலாத்காரம் செய்திருக்கிறார் என்றும் கூட்டு பலாத்காரம் நடைபெறவில்லை என்றும் போலீசார் தெரிவித்தனர். இதற்கான சான்றுகள் கிடைத்துள்ளன என காவல் ஆணையாளர் சுனில் குமார் சவுத்ரி கூறுகிறார். இதனால், இந்த வழக்கில் ஆண் நண்பரே சதி திட்டம் தீட்டியது தெரிய வந்துள்ளது. தொடர்ந்து விசாரணை நடைபெறும் என அவர் கூறினார்.
அந்த மாணவி, டாக்டரிடம் அளித்த புகாரில், அவரையும் அவருடைய ஆண் நண்பரையும் சிலர் துரத்தினர். அவர்கள் கும்பலாக பைக்கில் அவர்களை நோக்கி வந்துள்ளனர். இதனால், பயந்து போன அந்த மாணவி, நண்பருடன் காட்டுக்குள் ஓடியுள்ளார். அப்போது, இரவு உணவு சாப்பிடுவதற்காக சென்று கொண்டிருந்தோம் என்றார்.
இதனை தொடர்ந்து, 3 பேர் அவர்களை நோக்கி ஓடியுள்ளனர். துரத்தி வந்த அவர்கள், அந்த மாணவியை பிடித்து, காட்டுக்குள் இழுத்து சென்றனர். அந்த மாணவியை தரையில் படுக்க வைத்தபோது, அவர் சத்தம் போட்டு அலறியுள்ளார். அப்போது அவர்கள் சத்தம் போட்டால் நிறைய ஆண்களை கூப்பிடுவோம் என கூறியுள்ளனர். அதனால், சத்தம் போடாமல் இருக்கும்படி கூறினார்கள் என டாக்டரிடம் அவர் கூறியுள்ளார்.
கொல்கத்தா நகரில் கடந்த ஆண்டு ஆர்.ஜி.கர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதுடன், கொடூர தாக்குதல் நடத்தியதில் பலியானார். அந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. அந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சஞ்சய் ராய்க்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இந்நிலையில், இந்த ஆண்டில் மற்றொரு மருத்துவ கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொல்கத்தாவில் சட்ட கல்லூரி மாணவி ஒருவர் ஆளும் கட்சி பிரமுகர் ஒருவரால் கடந்த ஜூன் மாதத்தில் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.