புதுடெல்லி: ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதன் மூலம் உக்ரைன் மீதான போரை இந்தியா மறைமுகமாக ஆதரித்து வருவதாக அமெரிக்கா தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது.
இந்த நிலையில், ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதலை படிப்படியாக நிறுத்துவதாக பிரதமர் நரேந்திர மோடி தன்னிடம் உறுதி அளித்துள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், மத்திய வெளியுறவுத் துறை செய்தித்தொடர்பாளர் ரந்திர் ஜெய்ஸ்வால் கூறுகையில், “கச்சா எண்ணெய் விவகாரத்தில் அமெரிக்காவின் கருத்து குறித்து ஏற்கெனவே அறிக்கையை வெளியிட்டுள்ளோம்.
ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெயை கொள்முதல் செய்வது தொடர்பாக பிரதமர் மோடிக்கும் அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கும் இடையே எந்தவிதமான உரையாடலும் நடக்கவில்லை என்பது மட்டும் உறுதி” என்றார்.