புதுடெல்லி,
அமெரிக்காவின் பிலடெல்பியா மாகாணத்தில் அமெரிக்க ஓபன் ஸ்குவாஷ் போட்டிகள் நடந்து வருகின்றன. இதில், உலக தரவரிசையில் 30-ம் இடம் வகிக்கும் இந்திய வீரர் அபய் சிங் (வயது 27) மற்றும் உலக தரவரிசையில் 31-ம் இடம் வகிக்கும் எகிப்து நாட்டின் முகமது எல்ஷெர்பினி ஆகியோர் விளையாடினர்.
62 நிமிடங்கள் பரபரப்புடன் நீடித்த இந்த போட்டியில் முதல் செட்டை 11-8 என்ற புள்ளி கணக்கில் அபய் வென்றார். எனினும், அடுத்த 2 செட்டுகளை முகமது கைப்பற்றினார். 4-வது செட்டில் திறமையாக விளையாடி அபய் வெற்றி பெற்றார்.
இதனால், 5-வது செட்டை நோக்கி போட்டி சென்றது. போட்டியின் வெற்றியாளர் யார் என முடிவு செய்யும் இந்த செட்டை 11-5 என்ற புள்ளி கணக்கில் அபய் கைப்பற்றினார். இதனால், 11-8, 4-11, 4-11, 11-6, 11-5 என்ற புள்ளி கணக்கில் அவர் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறி உள்ளார்.
அவருடைய சக வீரரான ரமித் தாண்டன், நியூசிலாந்து வீரரான உலக தரவரிசையில் 3-ம் இடம் வகிக்கும் பால் கோல் என்பவரிடம் 5-11, 9-11, 7-11 என்ற புள்ளி கணக்கில் தோல்வி கண்டார். அடுத்து ஜோயல் மேகினை எதிர்த்து அபய் சிங் விளையாடுவார்.