ஐதராபாத்,
தெலுங்கானா மாநிலம் நிசாமாபாத் பகுதியை சேர்ந்த ரவுடி ஷேக் ரியாஸ் (வயது 24). இவரை வழக்கு ஒன்றில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு நிசாமாபாத் போலீஸ் நிலைய போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட ஷேக் ரியாசை கான்ஸ்டபிள் பிரமோத் தனது பைக்கில் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளார் . அப்போது தான் வைத்திருந்த கத்தியால் கான்ஸ்டபிள் பிரமோத்தை சரமாரியாக குத்திவிட்டு ரியாஸ் தப்பிச்சென்றார். தடுக்க முயன்ற சப் – இன்ஸ்பெக்டர் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளார்.
ரவுடி ரியாஸ் தாக்கியதில் படுகாயமடைந்த கான்ஸ்டபிள் பிரமோத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை இரவு உயிரிழந்தார். இதனை தொடர்ந்து விசாரணையை தீவிரப்படுத்திய போலீசார் கான்ஸ்டபிள் பிரமோத்தை குத்திக்கொலை செய்துவிட்டு தப்பியோடிய ரவுடி ரியாசை தீவிரமாக தேடி வந்தனர்.
இதனிடையே, போலீசாரின் தீவிர தேடுதல் வேட்டைக்குப்பின் நிசாமாபாத் அருகே சரம்பூர் கிராமத்தில் பதுங்கி இருந்த ரவுடி ரியாசை போலீசார் இன்று கைது செய்தனர். கைது நடவடிக்கையின்போது போலீசார் மீது தாக்குதல் நடத்த ரியாஸ் முயன்றுள்ளார். இதனால் ரியாசின் காலில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார். பின்னர், நிசாமாபாத் மருத்துவமனையில் ரியாஸ் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், மருத்துவமனையில் இருந்து ரியாஸ் இன்று தப்பியோட முயன்றார். மருத்துவமனையில் பாதுகாப்புப்பணில் இருந்த போலீஸ் அதிகாரியின் துப்பாக்கியை பறித்துக்கொண்டு ரியாஸ் தப்பியோட முயன்றார். இதனால், பொதுமக்கள் பாதுகாப்பு கருதி தப்பியோட முயன்ற ரவுடி ரியாசை போலீசார் துப்பாக்கியால் சுட்டனர். இதில் மருத்துவமனை வளாகத்தில் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த ரவுடி ரியாஸ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த என்கவுன்டர் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.