அடிலெய்டில் இன்று நடைபெற்று வரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. இதில் துவக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சுப்மன் கில், விராட் கோலி ஆகியோர் அடுத்தடுத்து அவுட் ஆன போதிலும், ஷ்ரேயாஸ் ஐயருடன் ஜோடி சேர்ந்து இந்திய அணியின் விக்கெட் வீழ்ச்சியை தடுத்தார் ரோஹித் சர்மா. இந்த ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
இதற்கிடையே, பேட்டிங் செய்யும் ரோஹித் சர்மாவுக்கும் ஷ்ரேயாஸ் ஐயருக்கும் இடையே லேசான வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு ரன்னை வேகமாக ஓடி எடுக்க ரோஹித் சர்மா முயன்ற போது, ஐயர் “நோ” சொல்லி பின்வாங்கினார். இதனால் டென்ஷன் ஆன ரோஹித் சர்மாவுக்கும் ஐயருக்கும் இடையே லேசான வாக்குவாதம் ஏற்பட்டது.
இருவருக்கும் இடையேயான உரையாடல் ஸ்டம்ப் மைக்கில் பதிவாகியுள்ளது. அதன் விவரம்:
ரோஹித்: ஷ்ரேயாஸ், இதில் ஒரு ரன்னை எடுத்து இருக்கலாம்.
ஐயர்: நீங்கள் கூப்பிடுங்கள், அதன்பிறகு என்னை பார்க்காதீர்கள்.
ரோஹித்: நீ தான் முதலில் கூப்பிட்டு இருக்க வேண்டும், அவர் 7வது ஓவரை வீசுகிறார்.
ஐயர்: அவர் எந்த கோணத்தில் ஓடுகிறார் என்று எனக்குத் தெரியவில்லை… நீங்களே கூப்பிடுங்கள்.
ரோஹித்: என்னால் கூப்பிட முடியாது.
ஐயர்: அது (பந்து) உங்கள் முன்னால்தான் இருக்கிறது.
இவ்வாறு இருவரும் காரசாரமாக பேசிக் கொண்டனர்.
இந்தக் காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகின்றன. களத்தில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டாலும், தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ரோஹித் சர்மா 73 ரன்களும், ஷ்ரேயாஸ் ஐயர் 61 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். இவர்கள் அமைத்த பார்ட்னர்ஷிப்பால் மட்டுமே இந்திய அணி 200 ரன்களை தாண்ட முடிந்தது.
இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 264 ரன்கள் எடுத்தது. இதையடுத்து ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்து வருகிறது.