ஆந்திராவில் பேருந்து தீப்பிடித்து பயங்கர விபத்து: 25 பயணிகள் உயிரிழப்பு

கர்னூல்: ஆந்திர மாநிலம், கர்னூல் அருகே ஹைதராபாத்தில் இருந்து பெங்களூரு நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் சொகுசு பேருந்து, பைக் மீது மோதியதில், தீப்பிடித்து விபத்து ஏற்பட்டது. இந்த கோர விபத்தில் பேருந்தில் பயணித்த 25 பேர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விபத்தில் பலர் காயமடைந்தனர்.

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் இருந்து நேற்றிரவு 10.30 மணிக்கு வி காவேரி எனும் தனியார் சொகுசு பேருந்து 41 பயணிகளை ஏற்றிக்கொண்டு ஆந்திர மாநிலம், கர்னூல் வழியாக பெங்களூரு நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது, கர்னூல் மாவட்டம், 44-வது தேசிய நெடுஞ்சாலையில் சின்ன டேக்கூரு எனும் இடத்தில், இன்று (அக்.24) அதிகாலை 3 மணியளவில் முன்னால் சென்று கொண்டிருந்த பைக் மீது இந்த சொகுசு பேருந்து வேகமாக மோதியது.

இதில், பைக்கில் இருந்தவர் தூக்கி எறியப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். ஆனால், பேருந்தின் அடியில் அந்த பைக் சிக்கி கொண்டது. பேருந்தின் ஓட்டுநர் இதனை கவனிக்காமல் பேருந்தை சுமார் 350 மீட்டர் வரை ஓட்டியுள்ளார். இதில் பைக்கில் இருந்த பெட்ரோல் டேங்க் வெடித்துள்ளது. அதிலிருந்து பேருந்தின் டீசல் டேங்கில் தீப்பற்றி, மளமளவென பேருந்து முழுவதும் தீ பரவியுள்ளது.

அதிகாலை தூங்கி கொண்டிருந்த பயணிகளில் கீழ் வரிசையில் உள்ள படுக்கையில் தூங்கி கொண்டிருந்தவர்கள் மட்டுமே பேருந்தில் இருந்து இறங்கி உயிர் பிழைத்துள்ளனர். சிலர் அவசர காலத்தில் உதவும் எமர்ஜென்சி எக்சிட் கதவை உடைத்து கொண்டு வெளியேறினர். இவர்களில் பலர் படுகாயமடைந்துள்ளனர். ஆனால் மேல் படுக்கையில் படுத்து தூங்கி கொண்டிருந்தவர்கள் எழுந்து கீழே இறங்குவதற்குள் பேருந்து முழுவதும் தீ பரவியது. தீ மற்றும் புகையினால் அவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதில் பேருந்தில் இருந்த சுமார் 25 பேர் பரிதாபமாக தீயில் கருகி உயிரிழந்தனர்.

கர்னூலில் விபத்தில் சிக்கி தீயில் எரிந்த நிலையில் பேருந்து.

தகவல் அறிந்ததும் கர்னூல் போலீஸார், தீயணைப்பு படையினர், ஆம்புலன்ஸ் வந்தது. அவர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர். காயமடைந்து சாலையில் அமர்ந்து அழுது கொண்டிருந்தவர்களை ஆம்புலன்ஸில் கர்னூல் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சீட்டில் இருந்தபடியே பலர் உயிருடன் எரிந்து இறந்துள்ளனர். ஆதலால் எலும்பு கூடுகளாக இருக்கும் இவர்கள் யார் யார் என்பது குறித்து டிஎன்ஏ பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. இறந்தவர்கள் சிலரின் உடல்களுக்கு பிரேத பரிசோதனை நடத்தி அவரவர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு வருகிறது.

விபத்து ஏற்ப்பட்ட இடத்தில் கர்னூல் போலீஸார், தீயணைப்பு படையினர்.

பேருந்து தீ விபத்து குறித்து அறிந்த குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, துணை முதல்வர் பவன் கல்யாண், தெலங்கானா மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி ஆகியோர் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துள்ளனர். பிரதமர் நிதியில் இருந்து இறந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரு.50 ஆயிரமும் நிதி உதவி அறிவிக்கப்பட்டுள்ளது.

கர்னூல் போலீஸார் வழக்கு பதிவு செய்து தலைமறைவான பேருந்து ஓட்டுநரை கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.