சென்னை: மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு இழப்பீட்டு நிதி உதவியை உடனடியாக வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு வைகோ வலியுறுத்தி உள்ளார். இதுகுறித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தேனி மாவட்டத்தில் பருவமழை தீவிரம் அடைந்து, முல்லைப் பெரியாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், ஆற்றின்கரையோரப் பகுதியிலும், பாசனப் பகுதியில் உள்ள அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள், காய்கறிகள் நீரில் மூழ்கி பாதிப்பு அடைந்துள்ளன.
சின்ன வாய்க்கால், உத்தமமுத்து வாய்க்கால், கம்பம், சின்னமனூர், உத்தமபாளையம், உப்புக்கோட்டை, பாலார்பட்டி கூழையனூர் பகுதிகளில் வாய்க்கால்களில் உடைப்பு ஏற்பட்டு அறுவடைக்கு தயாராக இருந்த நெற் பயிர்கள் நீரில் மூழ்கி அழுகி இருக்கின்றன. எனவே, சேதமடைந்துள்ள நெற் பயிர் மற்றும் தோட்டப் பயிர்களைக் கணக்கீடு செய்து தமிழக அரசு இழப்பீடு வழங்க வேண்டும். சேதம டைந்த வாய்க்கால் கரைகளை செப்பனிட வேண்டும். இவ்வாறு வைகோ தெரிவித்துள்ளார்.