கன்னியாகுமரி மாவட்டத்தில் விடிய விடிய கனமழை கொட்டித் தீர்த்தது. பேச்சிப்பாறை அணையில் இருந்து 1,850 கனஅடிக்கு மேல் தண்ணீர் திறந்து விடப்பட்டதால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. குறிப்பாக, 3 நாட்களாக கனமழை தீவிரமடைந்துள்ளது. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. நேற்று முன்தினம் மாலையில் இருந்து கொட்டிய கனமழை நேற்று காலை வரை தொடர்ச்சியாக பெய்தது.
நேற்று காலை 8 மணி வரையான 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக, பேச்சிப்பாறை அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியான பாலமோரில் 92 மிமீ மழை பெய்தது. இதனால், பேச்சிப்பாறை அணைக்கு விநாடிக்கு 3,955 கனஅடி தண்ணீர் வரத்தானது. 48 அடி உச்சநீர்மட்டம் கொண்ட இந்த அணையில் நேற்று காலை 44.51 அடியாக நீர்மட்டம் உயர்ந்தது. மொத்தம் 1,850 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால், கோதையாறு, திற்பரப்பு அருவி, குழித்துறை தாமிரபரணி ஆறு, வள்ளியாறு ஆகியவற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், கரையோர பகுதி மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு பொதுப்பணித் துறை மற்றும் வருவாய்த் துறையினர் அறிவுறுத்தினர்.
திற்பரப்பு அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அப்பகுதிக்கு மக்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திற்பரப்பில் 82 மிமீ., சுருளோட்டில் 65, முள்ளங்கினாவிளை, மைலாடியில் தலா 54, சிற்றாறு-1-ல் 48, பேச்சிப்பாறையில் 45, கன்னிமாரில் 44, பெருஞ்சாணியில் 42, குருந்தன்கோட்டில் 40 மிமீ., மழை பதிவானது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் நேற்று 71 அடியாக உயர்ந்தது. விநாடிக்கு 2,811 கனஅடி தண்ணீர் வரத்தாகிறது. நாகர்கோவிலுக்கு குடிநீர் வழங்கும் முக்கடல் அணை நீர்மட்டம் 25 அடியான முழு கொள்ளளவை எட்டியது.

கனமழையால் நேற்று குமரி மாவட்டத்தில் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. ரப்பர் பால் வெட்டும் தொழில் நேற்று 7-வது நாளாக முடங்கியது. மழையால் திட்டுவிளை, செண்பகராமன்புதூர், வேம்பனூர் பகுதிகளில் அறுவடை பருவத்தில் உள்ள நெல் வயல்களில் தண்ணீர் தேங்கியது. பெரும்பாலான நெற்கதிர்கள் மழையில் நனைந்து முளைத்ததால் விவசாயிகள் கவலை அடைந்தனர். நாகர்கோவில் வடசேரி, கோட்டாறு, செட்டித்தெரு உட்பட பல இடங்களில் குடியிருப்பு பகுதியில் தண்ணீர் தேங்கி நின்றது. இதனால் பொதுமக்கள் தவிப்புக்குள்ளாயினர். மேலும் நாகர்கோவில், கொட்டாரம், குலசேகரம் பகுதியில் மழையால் மரங்கள் சாய்ந்து விழுந்தும், மின்தடை ஏற்பட்டும் மக்கள் பாதிப்புக்குள்ளாயினர்.
இந்நிலையில், 77 அடி உச்சநீர்மட்டம் கொண்ட பெருஞ்சாணி அணை நேற்று மாலை 71 அடியை கடந்தது. எனவே, பரளியாற்றில் உபரிநீர் திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீர் வலியாற்றுமுகம், அருவிக்கரை. திருவட்டாறு, மூவாற்றுமுகம், குழித்துறை தாமிரபரணி ஆறு வழியாக சென்று தேங்காய்பட்டினம் கடலில் சேரும். எனவே, பரளியாறு, குழித்துறை தாமிரபரணி ஆறு கரையோர பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், 77 அடி உச்சநீர்மட்டம் கொண்ட பெருஞ்சாணி அணை நேற்று மாலை 71 அடியை கடந்தது. எனவே, பரளியாற்றில் உபரிநீர் திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீர் வலியாற்றுமுகம், அருவிக்கரை. திருவட்டாறு, மூவாற்றுமுகம், குழித்துறை தாமிரபரணி ஆறு வழியாக சென்று தேங்காய்பட்டினம் கடலில் சேரும். எனவே, பரளியாறு, குழித்துறை தாமிரபரணி ஆறு கரையோர பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.