ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் தலசீமியா நோயால் பாதிக்கப்பட்ட 5 சிறுவர்களுக்கு எச்ஐவி நோய் தொற்று இருப்பது ரத்த பரிசோதனையில் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. எச்ஐவி தொற்றால் பாதிக்கப்பட்டவரிடம் இருந்து பெறப்பட்ட ரத்தம் இந்த சிறுவர்களுக்கு ரத்த மாற்று சிகிச்சையின் போது செலுத்தப்பட்டது இதற்கு காரணம் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
அந்த மாநிலத்தில் உள்ள சாய்ப்பாசா டவுனில் அமைந்துள்ள சதார் மருத்துவமனையில் உள்ள ரத்த வங்கியில் தலசீமியா நோயால் பாதிக்கப்பட்ட 7 வயதான தங்களின் குழந்தைக்கு ரத்த மாற்று சிகிச்சையின் போது எச்ஐவி நோயால் பாதிக்கப்பட்டவரிடம் இருந்து பெறப்பட்ட ரத்தம் செலுத்தப்பட்டதாக அவரது குடும்பத்தினர் கடந்த வெள்ளிக்கிழமை அன்று குற்றம் சாட்டினர். இதன் மூலம் இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது.
இதன் பின்னர் இது குறித்து உரிய விசாரணை மேற்கொள்ள மாநில அரசு, 5 பேர் கொண்ட மருத்துவ குழு ஒன்றை அமைத்தது. இது குறித்து சனிக்கிழமை அன்று மருத்துவ குழுவினர் விசாரணை மேற்கொண்ட போது தலசீமியா நோயால் பாதிக்கப்பட்ட மேலும் 4 சிறுவர்களுக்கு எச்ஐவி பாதிப்பு இருப்பது ரத்த பரிசோதனையில் தெரியவந்தது. இந்த சிறுவர்கள் அனைவரும் சதார் மருத்துவமனையில் தொடர்ந்து ரத்த மாற்று சிகிச்சை பெற்று வந்துள்ளனர். இதை மருத்துவ குழுவினர் உறுதி செய்துள்ளனர்.
மருத்துவ குழுவின் முதற்கட்ட விசாரணையில் சதார் மருத்துவமனையில் செயல்படும் ரத்த வங்கியில் முறையான வழிகாட்டுதலை பின்பற்றவில்லை என தெரியவந்துள்ளது. ரத்த மாதிரி சோதனை, பதிவுகளை பராமரிப்பது, பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்றுதலில் ஒழுங்கின்மையை மருத்துவ குழுவினர் கண்டறிந்துள்ளனர்.
இது குறித்து மாநில சுகாதாரத்துறைக்கு விரிவான அறிக்கை தாக்கல் செய்துள்ளனர். மேலும், தற்போதைக்கு சதார் மருத்துவமனையில் உள்ள ரத்த வங்கி அவசர மருத்துவ தேவைக்காக மட்டுமே பயன்படுத்த சுகாதாரத்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
அதே நேரத்தில் எச்ஐவி நோய் தொற்று பரவ மருத்துவமனையில் உள்ள ரத்த வங்கிதான் காரணம் என்ற இறுதி முடிவுக்கு வர முடியாது. இது தொடர்பாக முறையான விசாரணை மேற்கொள்ள வேண்டும். ஏனெனில், எச்ஐவி தொற்று பரவ இன்னும் பிற காரணங்கள் உள்ளன. பயன்படுத்தப்பட்ட ஊசிகள் மூலமாகவும் கூட எச்ஐவி தொற்று பரவும் என மாவட்ட அறுவை சிகிச்சை நிபுணரும், மருத்துவருமான சுஷாந்தோ குமார் மாஜி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மாநில சுகாதாரத்துறை செயலாளர் மற்றும் மாவட்ட அறுவை சிகிச்சை நிபுணரின் அறிக்கையை கேட்டுள்ளது ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றம். ஜார்க்கண்ட் மாநிலத்தின் மேற்கு சிங்பூம் மாவட்டத்தில் மட்டும் 515 எச்ஐவி தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளும், 56 தலசீமியா நோய் பாதிப்பு கொண்ட நோயாளிகளும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக ரத்த தானம் செய்த நபர்களின் விவரங்களையும் சுகாதாரத்துறை அதிகாரிகள் அடையாளம் காண நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட சிறுவர்களின் குடும்பத்தினர் தங்களுக்கு ஏற்பட்ட இந்த பாதிப்புக்கு மாவட்ட நிர்வாகம், மாநில அரசிடம் நீதி வேண்டும் என முறையிட்டுள்ளனர். இந்த மருத்துவ அலட்சியத்தை தங்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
