பெங்களூரு,
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள திலக்நகர் பகுதியில் நேற்று மாலை வெகு நேரமாக சாலையோரத்தில் ஒரு ஆட்டோ நின்று கொண்டிருந்தது. அந்த ஆட்டோவில் ஏதோ ஒரு பொருள், போர்வையில் சுற்றி வைக்கப்பட்ட நிலையில் இருந்ததைக் கண்டு அப்பகுதி மக்கள் அச்சமடைந்து போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து அங்கு விரைந்து வந்த போலீசார், ஆட்டோவை சோதனை செய்தபோது, போர்வைக்குள் ஒரு பெண்ணின் சடலம் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இந்த பெண்ணின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை நடத்தியபோது, சடலமாக கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் பெயர் சல்மா என்பதும், அவருக்கு திருமணமாகி 4 குழந்தைகள் உள்ளனர் என்பதும் தெரியவந்தது.
சல்மாவின் கணவர் சமீபத்தில் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. அவரது தலையில் பலமாக தாக்கப்பட்டதற்கான அடையாளம் உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். அவரை கொலை செய்து ஆட்டோவில் உடலைப் போட்டுச் சென்றது யார்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.