ஜெருசலேம்,
கடந்த 2023-ம் ஆண்டு அக்-7ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து ஹமாஸ் அமைப்பினர் திடீர் தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலில் 1,000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதுடன், 250க்கும் மேற்பட்டோரை பிணைக் கைதிகளாக சிறைப்பிடித்து சென்றனர். இதையடுத்து ஹமாஸ் அமைப்பினர் மீத் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக ஹமாஸ் அமைப்பினருக்கும் இஸ்ரேலுக்கும் இடையே யுத்தம் நடைபெற்று வந்தது.
இஸ்ரேல் நடத்திய இந்த தாக்குதலில், 67,000க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதனிடையே, அமெரிக்க அதிபர் டிரம்ப், இஸ்ரேல் – ஹமாஸ் இடையிலான போரை நிறுத்துவதற்கு தேவையான முயற்சிகளில் மேற்கொண்டார். இதன் பலனாக கடந்த 10 ஆம் தேதி காசாவில் போர் நிறுத்தம் வந்தது. எனினும், இந்த போர் நிறுத்தத்தை மீறி காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதாக குற்றச்சாட்டு எழுந்த்து.
இந்த நிலையில், போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஹமாஸ் அமைப்பினர் மீறியதாக கூறி உடனடியாக ராணுவ தாக்குதல் நடத்த இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உத்தரவிட்டுள்ளார். தெற்கு காசாவில் இஸ்ரேலிய படைகளை குறிவைத்து ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் குற்றம் சாட்டிய நிலையில், இந்த தாக்குதலுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. நெதன்யாகு இந்த தாக்குதலுக்கு உத்தரவிட்ட சில நிமிடங்களில், பிணைக்கைதி உடலை ஒப்படைப்பதை ஒத்திவைப்பதாக ஹமாஸ் அறிவித்துள்ளது. ஹமாஸ் அமைப்பு மீது தாக்குதல் நடத்த உத்தரவிட்டு இருப்பது மத்திய கிழக்கில் மீண்டும் உச்ச கட்ட பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.