புதுடெல்லி,
கான்பூர் இந்திய தொழில்நுட்ப நிறுவனத்துடன் (ஐ.ஐ.டி) இணைந்து டெல்லி அரசு நேற்று முன்தினம் 2 முறை மேக விதைப்பு சோதனைகளை நடத்தியது. ஆனால் டெல்லியில் மழைப்பொழிவு இல்லை. சோதனைகளுக்கு பிறகு நொய்டாவில் குறைந்தபட்ச மழைப்பொழிவே பதிவானது.இதுகுறித்து கான்பூர் இந்திய தொழில்நுட்ப நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது:-
டெல்லியில் திட்டமிடப்பட்ட மேக விதைப்பு சோதனை மேகங்களில் போதுமான ஈரப்பதம் இல்லாததால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த செயல்முறை சரியான வளிமண்டல நிலைமைகளைப் பொறுத்து அமையும். தற்போது நடத்தப்பட்ட சோதனை மழைப்பொழிவை தூண்டவில்லை. ஏனெனில் ஈரப்பதம் அளவு சுமார் 15 முதல் 20 சதவீதம் வரை இருந்தது. ஆனால் இந்த சோதனை பல நுண்ணறிவு படிப்பினைகளை வழங்கியது. இதுபோன்ற படிப்பினைகள் எதிர்காலத்தில் மிகவும் பயனுள்ள செயல்களுக்கு அடித்தளமாக அமையும்.
டெல்லியில் நடத்தப்பட்ட மேக விதைப்பு சோதனைகள், நிலைமைகள் அதற்கு ஏற்றதாக இல்லாவிட்டாலும், பயிற்சி மேற்கொள்ளப்பட்ட இடங்களில் காற்றின் மாசை குறைக்க உதவியது. மேக விதைப்புக்கு பிறகு காற்றின் தரம் சற்று மேம்பட்டது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. குட்டி விமானத்தில் சென்று மேகங்களின் மீது சில்வர் அயோடைடு எனப்படும் ரசாயனத்தை தூவி விட்டனர். இப்படி ஒவ்வொரு முறையும் விமானத்தில் சென்று ரசாயனத்தை தூவி விடுவதற்கு ₹64 லட்சம் செலவிடப்பட்டுள்ளது. 2 முறை முயற்சித்தும் மழை இல்லாத நிலையில், அரசு அதிகாரிகளும், விஞ்ஞானிகளும் ஏமாற்றம் அடைந்தனர்.