நாலந்தா: ‘‘இந்தியா – பாகிஸ்தான் இடையேயான போரை நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறுவதை மறுக்கும் தைரியம் பிரதமர் மோடிக்கு இல்லை’’ என ராகுல் காந்தி கூறியுள்ளார்.
பிஹார் மாநிலத்தில் நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு நாளந்தாவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பேசியதாவது:
பிஹாரில் தற்போது வினாத்தாள் கசிவு சம்பவங்கள் நடைபெறுகின்றன. இங்கு சுகாதார கட்டமைப்பு மிக மோசமாக உள்ளது. பிஹாரில் தற்போது நிலங்களே இல்லை. அனைத்தையும், ஒரு தொழில் நிறுவனத்துக்கு குறைந்த விலைக்கு மாநில அரசு வழங்கிவிட்டது.
கடந்த மக்களவை தேர்தலில் வாக்கு திருட்டு மூலம் தே.ஜ.கூட்டணி மத்தியில் ஆட்சிக்கு வந்தது. அம்பேத்கர் உருவாக்கிய அரசியல் சாசனத்தை ஒழிப்பதில் தே.ஜ.கூட்டணியும், பிரதமரும் உறுதியாக உள்ளனர்.
இந்தியா – பாகிஸ்தான் இடையேயான போரை நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பல முறை கூறிவிட்டார். இதை மறுக்கும் தைரியம் நமது பிரதமருக்கு இல்லை.
பிஹாரில் இண்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால், அது விவசாயிகள், தொழிலாளர்கள், தலித்துகள் மற்றும் பின்தங்கியவர்கள் மற்றும் அனைத்து சமுதாயத்தினரின் அரசாக இருக்கும். உலகின் மிகச் சிறந்த பல்கலைக்கழகம் நாளந்தாவில் அமையும். இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.
