கரூர்: கரூர் வேலுசாமிபுரத்தில் தவெக பிரச்சார கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்தது தொடர்பாக, அப்பகுதியைச் சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட வர்த்தகர்களிடம் சிபிஐ அதிகாரிகள் நேற்று விசாரணை மேற்கொண்டனர்.
கரூர் வேலுசாமிபுரத்தில் செப். 27-ம் தேதி நடைபெற்ற தவெக பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. அக். 30-ம் தேதி முதல் நேற்று முன்தினம் வரை சம்பவம் நடைபெற்ற வேலுசாமிபுரத்தில் சிபிஐ அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, 3-டி லேசர் ஸ்கேனர் மூலம் சாலையை அளவீடு செய்யும் பணியை மேற்கொண்டனர். தொடர்ந்து, அப்பகுதி நேரடி சாட்சிகளிடமும் விசாரணை நடத்தினர்.
இந்நிலையில், வேலுசாமிபுரத்தைச் சேர்ந்த வர்த்தகர்கள், உயிரிழந்தவர்களின் உறவினர்கள், காயமடைந்தவர்கள் என 300-க்கும் மேற்பட்டவர்களுக்கு விசாரணைக்கு ஆஜராகக் கூறி, சிபிஐ சம்மன் அனுப்பியிருந்தது.
இதையடுத்து, கரூர் சுற்றுலா மாளிகையில் வேலுசாமிபுரத்தைச் சேர்ந்த செல்போன் கடை உரிமையாளர், டெய்லர், மெக்கானிக் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்டோர் சிபிஐ அதிகாரிகள் முன்பு நேற்று ஆஜராகினர். அவர்களிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். தொடர்ந்து, உயிரிழந்தவர்கள், காயமடைந்தவர்களின் குடும்பத்தினர்களிடம் நேரில் சென்று சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
தேடி வந்த அதிகாரிகள்… இதற்கிடையே, கரூர் காமராஜபுரத்துக்கு காரில் வந்த சிபிஐ அதிகாரிகள் 3 பேர், ராம்குமார் என்பவர் குறித்து அப்பகுதியில் விசாரித்தனர். அவர், ஆதவ் அர்ஜுனாவின் ‘வாய்ஸ் ஆப் காமன்’ அமைப்பில் பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது. அவர்கள் தேடி வந்த முகவரியில் இருந்த வீட்டின் கதவு பூட்டியிருந்ததால், அந்த வீட்டை புகைப்படம் எடுத்து கொண்டு அங்கிருந்து புறப்பட்டனர்.