சோன்பர்சா (பிஹார்): பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் மகா கூட்டணி வெற்றி பெற்றால் தேர்தல் வாக்குறுதிப்படி ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.
பிஹாரில் முதல்கட்டத் தேர்தல் வரும் 6-ம் தேதி நடைபெற உள்ளது. அன்றைய தினம் 121 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இத்தொகுதிகளில் தேர்தல் பிரச்சாரம் நாளையுடன் நிறைவடைய உள்ளது. இந்நிலையில், சோன்பர்சா நகரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய காங்கிரஸ் பொதுச் செயலாளரும் மக்களவை உறுப்பினருமான பிரியங்கா காந்தி வத்ரா, மாநிலத்தில் மகா கூட்டணி வெற்றி பெற்றால் ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும், அரசு பணியாளர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும் என உறுதி அளித்துள்ளார்.
தேர்தல் பிரச்சாரத்தின்போது அவர் பேசியது: நாட்டின் வளர்ச்சிக்கு பிஹார் மிகப் பெரிய பங்களிப்பை அளித்துள்ளது. அந்த வகையில், நாட்டின் குடிமகன் என்பதில் நீங்கள் பெருமை கொள்ளுங்கள். நமது அரசியலமைப்புதான் வயது வந்த அனைவருக்கும் வாக்களிக்கும் உரிமையை அளித்தது. அந்த உரிமையை பறிக்கும் வகையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி செயல்பட்டு வருகிறது. பிஹாரில் 65 லட்சத்துக்கும் மேற்பட்டோரின் வாக்குகள் பறிக்கப்பட்டுள்ளன. இதன் பொருள், அவர்களின் உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளன. வாக்குரிமை போய்விட்டால் பிறகு எதுவும் இருக்காது. வாக்கு திருட்டு என்பது மக்களுக்கு எதிரான பெரிய சதி.
தேர்தலுக்கு ஒரு வாரம் முன்பு பிரதமர் மோடியும் முதல்வர் நிதிஷ் குமாரும் பெண்களுக்கு ரூ.10,000 கொடுக்கிறார்கள். 20 ஆண்டுகளாக இந்த ரூ. 10,000 ஏன் கொடுக்கப்படவில்லை? இந்த பணத்தை பெற்றுக்கொள்ளுங்கள். ஆனால், அவர்களுக்கு வாக்களிக்காதீர்கள்.
பிஹாரில் வேலைவாய்ப்பு இல்லாததால், பல லட்சம் இளைஞர்கள் வேலை தேடி நாட்டின் பல மாநிலங்களுக்குச் செல்கிறார்கள். தங்கள் குடும்பங்களை விட்டு விலகி இரவு பகலாக அவர்கள் போராடுகிறார்கள். உண்மையில் இந்த நாட்டை கட்டி எழுப்பியவர்கள் பிஹாரிக்கள். ஆனால், தற்போது அவர்கள் வேலையின்றி தவிக்கிறார்கள்.
விவசாயத்தின் மூலம் ஏராளமான மக்கள் பொருள் ஈட்டி வந்தார்கள். இன்று அதுவும் லாபகரமான தொழில் அல்ல. இங்குள்ள விவசாயிகள் கடினமாக உழைக்கிறார்கள். ஆனால், அவர்களின் பயிர்களுக்கு நியாயமான விலை கிடைப்பதில்லை.
அனைத்து பெரிய தொழில்களையும் பிரதமர் மோடி தனது நண்பர்களுக்கே வழங்குகிறார். பிஹாரில் அதானிக்கு மிக மிக குறைந்த விலையில் நிலம் வழங்கப்பட்டது. அதுமட்டுமல்ல, மோடியின் நண்பர்களின் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
பிஹாரில் மகா கூட்டணி ஆட்சிக்கு வந்தால், தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டபடி ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும், அனைத்து நியமனங்களும் திட்டமிட்டபடி முடிக்கப்படும், வினாத்தாள் கசிவுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும், தேர்வுக் கட்டணம் ரத்து செய்யப்படும், ஏழை குடும்பங்கள் தொழில் தொடங்க ரூ. 2 லட்சம் நிதி உதவி வழங்கப்படும், ரூ.25 லட்சம் வரை இலவச சிகிச்சை வழங்கப்படும், பழைய ஓய்வூதியம் அமல்படுத்தப்படும், ஒப்பந்த தொழிலாளர்கள் நிரந்தரமாக்கப்படுவார்கள், விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு உத்தரவாதமான குறைந்தபட்ச ஆதரவு நிலை வழங்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து ரோசெரா நகருக்குச் சென்ற பிரியங்கா காந்தி வத்ரா, அங்கு வாகனத்தின் மீது அமர்ந்தவாறு பேரணியாகச் சென்றார். அவருடன் ஏரளமான காங்கிரஸ் தொண்டர்கள் சென்றனர்.