விவசாய நிலங்கள், எண்ணெய் வளங்கள், தங்கச் சுரங்கங்கள் என இயற்கை வளங்கள் நிறைந்த ஆப்பிரிக்க நாடு சூடான். இத்தனை வளங்கள் இருந்தும் உள்நாட்டுப் போரால் இன அழிப்பு, பசி, பட்டினி, வன்முறை என்று அங்கு நிகழும் அவலங்கள் உலகின் மிக மோசமான ‘மனிதாபிமான நெருக்கடி’ கொண்ட நாடாக அதை மாற்றியுள்ளது.
‘ரத்தம் குடிக்கும் அதிகாரப் பசி’ – சூடானில் உள்நாட்டுப் போர் தொடங்கி 3 ஆண்டுகள் ஆகிவிட்டன. சூடான் தேசிய ராணுவத்துக்கும், அந்நாட்டின் துணை ராணுவப் படையான ரேபிட் சப்போர்ட் ஃபோர்ஸ் (ஆர்எஸ்எஃப் – Rapid Support Forces)-க்கும் இடையேயான ‘அதிகார’ மோதல் மூன்றாண்டுகளில் சுமார் 1.5 லட்சம் உயிர்களைப் பறித்துள்ளது. கிட்டத்தட்ட 1.2 கோடி பேரை அவர்களது வசிப்பிடங்களை விட்டு உள்நாட்டிலேயே முகாம்களில் தஞ்சம் புகச் செய்துள்ளது. எப்போதுமே எரியும் கனலாக இருக்கும் சூடான் கிளர்ச்சிக்கு, அண்மையில் ஆர்எஸ்எஃப் படைகள் தார்ஃபுர் நகரின் முக்கியப் பகுதியான எல் ஃபாசரைக் கைப்பற்றியது மேலும் தூபம் போட்டுள்ளது. அதன் பின்னணி குறித்து சற்று சுருக்கமாகப் பார்ப்போம்.
சூடான் கலவரத்தின் பின்னணி: 20-ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் சூடான் பிரிட்டிஷ் காலனியாக இருந்தது. 1956-ல் சூடான் விடுதலை பெற்றது. சூடானின் ஏற்றுமதி வருவாயில் 73 சதவீதம் எண்ணெய் ஏற்றுமதி வாயிலாக கிடைக்கின்றது. விவசாயம், எண்ணெய், தங்கம் என இத்தனை வளமும் இருந்தும் சூடான் உலகின் மிகவும் ஏழ்மையான நாடுகளின் பட்டியலில்தான் இருக்கிறது. காரணத்தைத் தேடினால், அங்கே நிலையான ஆட்சி இல்லை. ஜனநாயக அரசு இல்லை. சிறு குழுக்களும், கிளிர்ச்சியாளர்களும், ராணுவமும்தான் ஆதிக்கம் செலுத்த முடிகிறது. ராணுவத்துக்கும், துணை ராணுவத்துக்கும் இடையே அதிகார மோதல் என்று பட்டியல் நீளும்.
சூடான் நாட்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிக் கவிழ்ப்பு 2021-ல் நிகழ்ந்தது. அதற்குப் பின்னர் ராணுவ ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு ராணுவ ஆட்சிக்கு எதிராக பல்வேறு கிளர்ச்சியாளர்கள் குழுக்கள் செயல்படுகின்றன. அதுமட்டுமல்லாது ராணுவத்தின் ஒரு பிரிவான பலம் பொருந்திய துணை ராணுவப் படையான ஆர்எஸ்எஃப் என்ற பிரிவும் ராணுவ ஆட்சிக்கு எதிராக இயங்குகிறது. ஆர்எஸ்எஃப்-ஐ ராணுவத்துடன் இணைக்கும் முயற்சி தொடர்ந்து தோற்றும் வருகிறது.
2023-ல் இந்த ஆர்எஸ்எஃப் சூடான் விமான நிலையத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தது. அப்போதுதான் சூடான் ராணுவம் இந்த ஆர்எஸ்எஃப் படைகளை ஒரு மிகப் பெரிய அச்சுறுத்தலாகப் பார்க்க ஆரம்பித்தது. இந்த ஆர்எஸ்எஃப் அமைப்பின் வேர் ஜன்ஜாவீட் எனப்படும் கிளர்ச்சிக் குழுக்கள். இந்தக் குழுவானது 2000-ன் தொடக்கத்தில் தார்ஃபுர் நகரில் பல படுகொலைகளை கட்டவிழ்த்து விட்டிருந்தது. இப்போது துணை ராணுவப் படை என்ற முகத்தொடு இன்னும் கொடூரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
சூடானின் எண்ணெய் வளம், தங்கச் சுரங்க வளங்களைச் சுரண்ட பல வெளிநாடுகளும், இந்த ஆர்எஸ்எஃப் துணை ராணுவப் படையை தூண்டிவிட்டுக் கொண்டே இருக்கின்றன என்பதுதான் உள்நாட்டுப் போர் நாளுக்கு நாள் முற்றுவதற்கு முக்கியக் காரணம். இதன் பின்னணியில் ஐக்கிய அரபு அமீரகம் இருப்பதாகக் குற்றஞ்சாட்டுகிறது சூடான் ராணுவம். ஆனால் இதனை யுஏஇ தொடர்ந்து மறுத்து வருகிறது.
அதன் பின்னர் அங்கு நடந்ததுதான் கோரம்! – இப்படி தனது ஆதிக்கத்தை வலுப்படுத்திக் கொண்டே வரும் ஆர்எஸ்எஃப் அண்மையில் எல் ஃபாசர் நகரைக் கைப்பற்றியது. ராணுவமும் தோல்வியை ஒப்புக் கொண்டு தனது படைகளை அப்பகுதியிலிருந்து வாபஸ் பெற்று பாதுகாப்பான இடங்களுக்குப் பெயர்ந்தது.
இதனால் இனப்படுகொலைகள் தலைவரித்தாடியது. ஆர்எஸ்எஃப் எல் ஃபாசர் நகரில் ஒவ்வொரு வீடாகச் சென்று அவர்களின் பூர்விகத்தை அலசி அரபு வழித்தோன்றல்களாக அல்லாதோரை படுகொலை செய்தது. சிலரிடம் பெரியளவில் பிணைத்தொகை பெற்றுக் கொண்டு அவர்களை உயிருடன் விட்டது. எல் ஃபாசரைக் கைப்பற்றிய முதல் 24 மணி நேரத்தில் மட்டும் பெரியளவில் இன அழிப்பு நடந்துள்ளது.
சூடானில் நடந்த அந்தக் கோரத் தாக்குதல் சம்பந்தமான சாட்டிலைட் படங்கள் வெளியாகி, அதற்கு சாட்சியாகியுள்ளன. அவை ஆங்காங்கே மனித உடல்கள் கிடப்பதையும், ரத்த ஆறு ஓடுவதையும் ஆவணப்படுத்தியுள்ளன. அரபு வழித்தோன்றல்கள் அல்லாதோர், ஃபர், ஜகாவா, பெர்ட்டி இன மக்கள் கொன்று குவிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

#AllEyesonSudan என்ற ஹேஷ்டேகுகளில் பதியப்படும் தகவல்கள் பலவும் எல்லா போர்களிலும் நிகழ்வதுபோல் பெண்கள், பெண் பிள்ளைகள் பாலியல் வன்கொடுமை மற்றும் பல்வேறு பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகப்பட்டு வருவதைச் சொல்கின்றன. வடக்கு மற்றும் கிழக்கு சூடான், சூடான் துறைமுகம் ஆகியன மட்டும்தான் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இப்போது உள்ளன. மற்றபடி அனைத்தும் ஆர்எஸ்எஃப் கட்டுப்பாட்டுக்குள் சென்றுவிட்டது.

சூடானில் நீண்ட காலமாக நடக்கும் உள்நாட்டுக் கலவரத்தால் அங்கே 2.4 கோடி மக்கள் தீவிர உணவு பாதுகாப்பின்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர். பல இடங்களில் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. எல் ஃபசார் அருகே உள்ள புலம்பெயர்ந்த மக்களுக்கான ஜம்ஜம் முகாமில் கூட உணவுப் பாதுகாப்பு இல்லாத சூழலே நிலவுகிறது. கூடவே காலரா உள்ளிட்ட தொற்று நோய்களும் ஏற்பட்டுள்ளன. இதனால்தான், #AllEyesonSudan என்ற ஹேஷ்டேக் சூடான் வன்முறை மீது சர்வதேச கவனத்தை ஈர்க்கும் வகையில் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகிக் கொண்டிருக்கிறது.