பெங்களூரு: ரேணுகாசுவாமி கொலை வழக்கில் நடிகர் தர்ஷன், அவரது காதலி பவித்ரா கவுடா மற்றும் 15 பேர் மீது பெங்களூரு 64-வது அமர்வு நீதிமன்றம் இன்று கொலை, குற்றவியல் சதி, கடத்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்துள்ளது. குற்றம்சாட்டப்பட்ட 17 பேரும் தாங்கள் குற்றமற்றவர்கள் என்று நீதிமன்றத்தில் வாதிட்டதால், இவ்வழக்கின் விசாரணை நவம்பர் 10-ஆம் தேதி தொடங்குகிறது.
பிரபல கன்னட நடிகரான தர்ஷன், தனது தோழியும் நடிகையுமான பவித்ரா கவுடாவை சமூக வலைதளத்தில் சீண்டிய தனது ரசிகர் ரேணுகாசுவாமி என்பவரை கடத்தி கொலை செய்த வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் பவித்ரா கவுடா, தர்ஷனின் நண்பர்கள், ரசிகர் மன்ற தலைவர், பவுன்சர்கள் உள்பட மேலும் 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கில் நடிகர் தர்ஷனுக்கு கடந்த ஆண்டு டிசம்பர் 13-ம் தேதி கர்நாடக உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இதை எதிர்த்து கர்நாடக அரசு, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. கர்நாடக உயர் நீதிமன்றம் வழங்கிய ஜாமீனை உச்ச நீதிமன்றம் ரத்து செய்ததை அடுத்து, கடந்த ஆகஸ்டு மாதம் கன்னட நடிகர் தர்ஷன் கைது செய்யப்பட்டார்.
ரேணுகாசாமி கொலை வழக்கில் கன்னட நடிகர் தர்ஷன், அவரது காதலி பவித்ரா கவுடா மற்றும் 15 பேர் மீது இன்று (நவம்பர் 3) பெங்களூரு 64-வது அமர்வு நீதிமன்றம் கொலை, குற்றவியல் சதி, கடத்தல் மற்றும் சட்டவிரோதமாக ஒன்றுகூடியதாக குற்றம்சாட்டியது. இருப்பினும், குற்றம் சாட்டப்பட்ட 17 பேரும் தாங்கள் குற்றமற்றவர்கள் என்று வாதிட்டனர்.
இன்று நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியபோது, அதிகளவில் கூட்டம் இருந்ததால் நீதிபதி ஐபி நாயக் தனது விரக்தியை வெளிப்படுத்தினார். “இங்கே இவ்வளவு பேர் இருந்தால் எப்படி நீதிமன்ற நடவடிக்கையை தொடர முடியும்?” என்று அவர் குறிப்பிட்டார். மேலும், வழக்குடன் தொடர்பில்லாத வழக்கறிஞர்கள் வெளியேற வேண்டும் என்றும், இதே நிலைமை தொடர்ந்தால் விசாரணை ஒத்திவைக்கப்படும் என்றும், தேவைப்பட்டால் நேரில் விசாரணை நடத்தப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.
இதன்பின்னர், முதல் குற்றவாளியான பவித்ரா கவுடா மீதான குற்றச்சாட்டுகளை நீதிபதி படிக்கத் தொடங்கினார். குற்றச்சாட்டுகளின்படி, பவித்ரா ரேணுகாசாமியை செருப்பால் அடித்ததாகவும், தர்ஷன் ரேணுகாசாமியின் பேண்ட்டை கழற்றி, அவரது அந்தரங்க உறுப்பில் தாக்கியதாகவும், இதனால் அவர் இறந்ததாகவும் நீதிமன்றம் குறிப்பிட்டது.
குற்றம்சாட்டப்பட்ட 17 பேரும் குற்றத்தை ஒப்புக்கொள்ள மறுத்துவிட்டனர். இதனையடுத்து குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்த நீதிமன்றம் விசாரணைக்கான நடைமுறையைத் தொடங்கியது. இதைத் தொடர்ந்து, தர்ஷன், பவித்ரா உள்ளிட்டோர் மீண்டும் சிறைக்கு அனுப்பப்பட்டனர். வழக்கை ஒத்திவைத்த நீதிமன்றம், விசாரணையை நவம்பர் 10-ஆம் தேதி விசாரணையை தொடங்க திட்டமிட்டுள்ளது.