“உங்கள் வேலை போய்விட்டது” – ஊழியர்களுக்கு அதிகாலையில் அதிர்ச்சி கொடுத்த அமேசான் நிறுவனம்!

உலகின் மிகப்பெரிய மற்றும் அதிக ஊழியர்களைக் கொண்ட நிறுவனங்களில் ஒன்றான அமேசான், அண்மைக்காலமாக ஊழியர்களை வேலையை விட்டு நீக்கி வருவது பேசுபொருளானது. அதன் ஒரு பகுதியாக கடந்த வாரம் பல்வேறு குழுக்களை சேர்ந்த 14,000 பேரை அந்நிறுவனம் வேலையை விட்டு நீக்கியுள்ளது.

சம்மந்தப்பட்ட ஊழியர்களுக்கு இதுகுறித்த அறிவிப்பை தெரியப்படுத்தும் நோக்கில், அதிகாலையில் இரண்டு குறுஞ்செய்திகள் வாயிலாக அனுப்பியுள்ளது அமேசான் நிறுவனம். முதலில் வந்த குறுஞ்செய்தியில், ஊழியர்கள் அலுவலகம் வருவதற்கு முன்னால் தங்கள் இ-மெயிலை பார்க்கவும் என்றும், அடுத்த சில நிமிடங்களில் வந்த மற்றொரு குறுஞ்செய்தியில், அப்படி இ-மெயில் வராதவர்களுக்கு ஒரு உதவி தொலைபேசி எண்ணும் அனுப்பப்பட்டுள்ளது.

அதிகாலையில் கண்விழித்த ஊழியர்களுக்கு இது பெரும் அதிர்ச்சியாக அமைந்தது. அமேசான் நிறுவனத்தின் மக்கள் தொடர்பு மற்றும் தொழில்நுட்ப பிரிவின் துணைத் தலைவர் பெத் கலேட்டியிடமிருந்து வந்த மின்னஞ்சலில், “உங்களிடம் பகிர்ந்து கொள்ள சில முக்கியமான, ஆனால் கடினமான செய்திகள் என்னிடம் உள்ளன. எங்கள் நிறுவனம், எங்கள் முன்னுரிமைகள் மற்றும் எதிர்காலத்தில் கவனம் செலுத்த வேண்டியவை ஆகியவற்றை முழுமையாக மதிப்பாய்வு செய்த பிறகு, அமேசான் முழுவதும் சிலரை பணிகளில் இருந்து நீக்குவது என்ற கடினமான வணிக முடிவை நாங்கள் எடுத்துள்ளோம். துரதிர்ஷ்டவசமாக, உங்கள் வேலை போய்விட்டது” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும் நீக்கப்பட்ட ஊழியர்களுக்கான மூன்று மாத ஊதியமும் இன்னபிற சலுகைகளும் வழங்குவதாக அந்த மின்னஞ்சலில் உறுதி அளிக்கப்பட்டிருந்தது.

குறுஞ்செய்தி, மின்னஞ்சல்கள் மூலம் பணிநீக்கங்களைத் தெரியப்படுத்தும் இந்தப் புதிய முறை, பல்வேறு விவாதங்களை கிளப்பியுள்ளது. கூகுள் மற்றும் டெஸ்லா போன்ற முக்கிய தொழில்நுட்ப நிறுவனங்களிலும் கூட இந்த முறை அண்மைக்காலமாக பின்பற்றப்படுவதாகவும், அங்குள்ள ஊழியர்கள் ஒரே இரவில் எந்த எச்சரிக்கையும் இல்லாமல் வெளியேற்றப்படுவதாகவும் கூறப்படுகிறது.

பெத் கலேட்டி இது தொடர்பாக வெளியிட்டுள்ள பதிவில், “நாம் நினைவில் கொள்ள வேண்டியது என்னவென்றால், உலகம் வேகமாக மாறி வருகிறது. இந்த தலைமுறை ஏஐ தான் இணைய வளர்ச்சிக்குப் பிறகு நாம் பார்த்ததிலேயே மிகவும் அதிவேகமாக மாறக்கூடிய தொழில்நுட்பமாகும். மேலும் இது நிறுவனங்கள் முன்பை விட மிக வேகமாக புதுமைகளை உருவாக்க உதவுகிறது” என்று தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.