சஹர்சா(பிஹார்): “வளர்ச்சிக்கான அடையாளமாக விளங்குவது தேசிய ஜனநாயகக் கூட்டணி. அதேநேரத்தில், அழிவுக்கான அடையாளமாக விளங்குவது ஆர்ஜேடி – காங்கிரஸ் கூட்டணி” என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு சஹர்சா நகரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அப்போது அவர் பேசியது: “இந்த தேர்தலில் முதல்முறையாக வாக்களிக்கப் போகும் பல மகன்களும் மகள்களும் எனக்கு இருக்கிறார்கள். என் வாழ்க்கையில் முதல் முறையாக வாக்களித்தபோது, என் வாக்கு வீணாகக் கூடாது என விரும்பினேன். அதில் நான் வெற்றி பெற்றது மகிழ்ச்சியைத் தந்தது. இப்போது நீங்கள் அளிக்கும் முதல் வாக்கு அரசாங்கத்தை உருவாக்கும் வாக்குகளாக இருக்க வேண்டும். உங்கள் வாக்கு என்டிஏ அரசாங்கத்தை வலுப்படுத்தும்.
பிஹார் இளைஞர்கள் பிஹாரில் உழைத்து பிஹாரை முன்னேற்ற வேண்டும் என்பது எங்கள் எண்ணம். என்டிஏக்கு அளிக்கும் வாக்கு இதைச் செய்யும். சமீப ஆண்டுகளாக பிஹார் வளர்ச்சியின் வேகத்தை துரிதப்படுத்தியுள்ளது. இப்போது நாம் ஒன்றாக இந்த வளர்ச்சியின் வேகத்தை துரிதப்படுத்த வேண்டும். எனவே, மீண்டும் ஒருமுறை என்டிஏ அரசாங்கம் அமைய வேண்டும். மீண்டும் பிஹாரில் நல்லாட்சி அமைய வேண்டும்.
பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதில் பிஹார் எப்போதும் ஒரு சக்தி வாய்ந்த இடம். அன்னை சீதா தேவி, பாரதி தேவி, விதுஷி கார்கே போன்ற எண்ணற்ற பெண்கள், தாய்மார்கள் எங்களுக்கு உத்வேகம் அளிக்கிறார்கள். பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதற்கான ஊக்கத்தை அளிக்கும் இந்த பூமியில் இருந்து, பெண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பையில் இந்திய அணி வெற்றி பெற்றதற்காக முழு நாட்டுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். இந்தியாவின் மகள்கள் நேற்று மும்பையில் வரலாறு படைத்தார்கள்.
இந்தியா முதல்முறையாக பெண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்றது. 25 ஆண்டுகளுக்குப் பிறகு, உலகம் ஒரு புதிய உலக சாம்பியனைப் பெற்றுள்ளது. இந்தியாவின் மகள்கள் இந்த பெருமையை முழு நாட்டுக்கும் அளித்துள்ளனர். இந்த வெற்றி விளையாட்டுத் துறைக்கு மட்டுமல்ல, இந்திய மகள்கள் அனைவருக்கும் புதிய நம்பிக்கையை அளிக்கிறது. இந்திய அணியில் இருந்தவர்கள் சிறிய கிராமங்கள் மற்றும் நகரங்களைச் சேர்ந்தவர்கள். இவர்கள் நமது விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் மகள்கள். கீழ் – நடுத்தர குடும்பங்களைச் சேர்ந்தவர்கள்.
பிஹாரில் 1.4 கோடி சகோதரிகளின் வங்கிக் கணக்குகளில் தலா ரூ.10,000 டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. என்டிஏ அரசாங்கம் மீண்டும் அமையும்போது இந்த திட்டம் விரிவுபடுத்தப்படும். ஆனால், காட்டாட்சி நடத்தியவர்கள் உங்களுக்கு வழங்கப்படும் உதவியை நிறுத்த விரும்புவதால், பிஹாரின் ஒவ்வொரு சகோதரியும் மகளும் விழிப்புடன் இருக்க வேண்டும்.
ஆர்ஜேடி மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு வளர்ச்சியுடன் எந்த தொடர்பும் இல்லை. என்டிஏ வளர்ச்சியுடன் அடையாளப்பட்டுள்ளது. அதேநேரத்தில், ஆர்ஜேடி – காங்கிரஸ் அழிவுடன் அடையாளப்பட்டுள்ளது. ஆர்ஜேடி – காங்கிரஸின் பழிவாங்கும் அரசியலால் பிஹார் மக்கள் பல ஆண்டுகளாக அவதிப்பட்டனர். ஆர்ஜேடி – காங்கிரஸ் கட்சிக்கு வளர்ச்சியின் மொழி புரியவில்லை. அவர்களின் அகராதியில் பயங்கரவாதம், கொடுமை, மோசமான நடத்தை, மோசமான நிர்வாகம், ஊழல் போன்ற வார்த்தைகளே நிறைந்துள்ளன. காட்டாட்சி பள்ளியில் அவர்கள் கற்றுக்கொண்டது இதுதான்” என்று பிரதமர் மோடி பேசினார்.