புதுடெல்லி: பிஹாரின் தேர்தல் பிரச்சார சுவரொட்டிகளில் இந்த மாநிலத்தில் காட்டாட்சிக்கு காரணமானவரின் (லாலு பிரசாத்) படங்களை ஏன் பயன்படுத்தவில்லை என்று பிரதமர் மோடி மறைமுகமாக ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவுக்கு கேள்வி எழுப்பி உள்ளார்.
கதிஹாரில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் பிரதமர் மோடி இதுகுறித்து பேசியதாவது: பிஹாரில் ஒட்டப்பட்டுள்ள ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் சுவரொட்டிகளில், பிஹாரில் கட்டாட்சியை கொண்டு வந்த நபரின் படங்கள்(லாலு பிரசாத்) முற்றிலுமாக காணவில்லை. ஒரு சில இடங்களில் தொலைநோக்கியில் கூட காணமுடியாத அளவுக்கு மிகச் சிறியதாக உள்ளன.
ராஷ்டிரிய ஜனதா தளத்தின் மிகப்பெரிய தலைவராக இருக்கும் அவரது முழு குடும்பமும் அரசியலில் ஈடுபட்டுள்ளது. பின்னர் ஏன் அவரதுபடத்தை பயன்படுத்தவில்லை. லாலு பிரசாத் யாதவின் மகன் தேஜஸ்வி தனது சொந்த தந்தையின் பெயரை குறிப்பிட ஏன் தயங்குகிறார். உங்களின் தந்தையின் பெயரைச் சொல்ல நீங்கள் ஏன் வெட்கப்படுகிறீர்கள்?
பிஹார் இளைஞர்களிடமிருந்து ஆர்ஜேடி மறைக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் தவறு என்ன என்று ஆர்ஜேடி தலைமையிலான எதிர்க்கட்சியின் மகா கூட்டணி முதல்வர்வேட்பாளராக களத்தில் இருக் கும் தேஜஸ்வி விளக்க வேண்டும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.