தமிழ்நாட்டில் இன்று முதல் வாக்காளர் சிறப்புத் தீவிரத் திருத்தம் (SIR) தொடங்குகிறது.
இந்தச் சிறப்புத் தீவிரத் திருத்தத்தை திமுக தொடங்கி காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மக்கள் நீதி மய்யம் போன்ற கட்சிகள் கடுமையாக எதிர்க்கின்றன.
இதற்கு அவர்கள் முன்வைக்கும் காரணங்களையும், விமர்சனங்களையும் பார்க்கலாம்.

1. தமிழ்நாட்டில் சிறப்புத் தீவிரத் திருத்தம் இன்று முதல் டிசம்பர் 4-ம் தேதி வரை நடக்க உள்ளது. கிட்டத்தட்ட 8 கோடி மக்கள் தொகை தமிழ்நாட்டில் ஒரு மாதத்திற்குள் எப்படி சிறப்புத் தீவிரத் திருத்தம் மேற்கொள்ள முடியும்.
2. ஒவ்வொரு வாக்குச்சாவடி அதிகாரிகளும் ஒவ்வொரு வீட்டிற்கும் 3 முறை நேரில் செல்ல வேண்டும் என்கிற உத்தரவைப் பிறப்பித்துள்ளது தேர்தல் ஆணையம்.
இந்தக் குறுகிய காலகட்டத்திற்குள் வாக்குச்சாவடி அதிகாரிகள் எப்படி அத்தனை வீடுகளுக்கும் மூன்று முறை செல்ல முடியும்? இதனால், அவர்கள் பீகாரைப் போல ஒரே வீட்டில் அமர்ந்து திருத்தப் பணிகளை மேற்கொள்வார்கள். இது எப்படிச் சரியாகும்?
3. தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ளன. இந்த நிலையில், ஏன் இவ்வளவு அவசரமாக சிறப்புத் தீவிரத் திருத்தத்தை மேற்கொள்ள வேண்டும்? இந்த அவசரத்தினால் முழுமையான திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்படாது.
4. வெளிமாநிலத்தவர்களுக்கும் வாக்குரிமை கொடுக்கும் முயற்சியே இந்த அவசர திருத்தப் பணி. வெளிமாநிலத்தவருக்கு இங்கே வாக்குரிமை கொடுக்கும்போது, தமிழ்நாட்டின் கலாசாரம், பாரம்பர்யம், கட்சிகள் ஆகியவை அவர்களுக்குத் தெரியாது. இதனால், அவர்கள் தேசியக் கட்சிக்கே வாக்களிப்பார்கள். ஆக, இது வாக்குகளைத் திருடும் முயற்சி ஆகும்.

5. பீகாரைப் போல பல தமிழ்நாட்டிலும் வாக்காளர்கள் நீக்கப்படலாம். மேலும், தகுதியில்லாதவர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படலாம்.
இப்படி பல குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றன தமிழ்நாட்டு கட்சிகள்.
சிறப்புத் தீவிரத் திருத்தத்தில் வேறு என்னென்ன பிரச்னை உள்ளன என்று நீங்கள் நினைக்கிறீர்கள் மக்களே… கமென்ட் செய்யுங்க!