பாட்னா: ‘பிஹார் சட்டப்பேரவை தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி உறுதியான வெற்றியைப் பெறும். எங்கள் கூட்டணி 160-க்கும் மேற்பட்ட இடங்களை வென்று முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் அடுத்த அரசாங்கம் அமையும்’ என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார்.
செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அமித்ஷா அளித்த பேட்டியில், “நாங்கள் 160-க்கும் மேற்பட்ட இடங்களை வென்று பிஹாரில் மீண்டும் ஆட்சி அமைப்போம். நிதிஷ் குமார் இங்கு முதல்வர், நரேந்திர மோடி அங்கு பிரதமர்.
மன்மோகன் சிங் பிரதமரானபோது, அவரால் பொதுமக்களை அணுக முடியவில்லை. மேலும், ஒரு பிரதமர் விளம்பரப்படுத்தக்கூடாது என்று கூறுவதை காங்கிரஸ் ஒரு ஃபேஷனாக மாற்றியது. பிரதமர் ஏன் விளம்பரப்படுத்தக்கூடாது?. தேர்தல்கள் ஜனநாயகத்தின் கொண்டாட்டம், மக்களுடன் இணைவது ஒவ்வொரு தலைவரின் கடமை.
ஒவ்வொரு முறையும், காங்கிரஸ் மோடிக்கு எதிராக அவதூறான மொழியைப் பயன்படுத்தியது. ஆனால், ஒவ்வொரு முறையும், இந்த நாட்டு மக்கள் பாஜகவின் வெற்றியை உறுதி செய்வதன் மூலம் அவர்களுக்கு பதிலளித்துள்ளனர். இந்த முறையும் அதுதான் நடக்கும். நரேந்திர மோடியின் அரசாங்கம் வந்த பிறகு, ஏழைகளின் நலனுக்காக நாங்கள் திட்டங்களை வகுத்தோம். இந்த நாட்டில் ஏழைகளின் எதிர்காலம் தேசிய ஜனநாயக கூட்டணியிடம் உள்ளது” என்றார்.