இயக்குநர் செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கிற `காந்தா’ திரைப்படம் வருகிற 14-ம் தேதி திரைக்கு வருகிறது.
துல்கர் சல்மான், ராணா, சமுத்திரக்கனி, பாக்யஶ்ரீ போஸ் எனப் பலரும் நடித்துள்ள இந்தப் படத்தின் டிரெய்லர் இன்று காலை வெளியானது. சென்னையில் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு நிகழ்வும் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் துல்கர் சல்மான் பேசுகையில், “இந்தப் படத்தின் கதையை நான் 2019-ல கேட்டேன். கதை கேட்ட அன்றைக்கு எனக்கு வேறொரு இடத்துல டின்னரும் இருந்தது.
கதையை ஆறு மணிக்குள்ள கேட்டு முடிச்சிட்டு போயிடலாம்னு திட்டமிட்டேன். ஆனா, 7.30 மணி ஆகிடுச்சு.
அப்போ நான் படத்தின் இயக்குநர் செல்வாகிட்ட டின்னர் போகணும்னு சொன்னேன்.
`பரவாயில்ல நான் 10 நிமிஷத்துல முதல் பாதி கதையைச் சொல்லி முடிச்சிடுவேன்’னு சொன்னாரு. முதற்பாதியைச் சொல்வதற்கே அவர் அவ்வளவு நேரம் எடுத்துக்கிட்டாரு.
நரேஷனுக்கு வரும்போதே ஒரு ஸ்பீக்கரோட வருவாரு. அதைக் கேட்பதே ஒரு படம் பார்த்த உணர்வைத் தரும். நம்ம தமிழ் சினிமாவுக்கு செல்வா மிகப்பெரிய குரலாக நிச்சயம் இருப்பார்.
சமுத்திரக்கனி சார் சில வரலாறுகளைச் சொல்லித் தருவார். அரசியல், சினிமானு நிறைய விஷயங்கள் பற்றி பேசுவாரு. இந்தப் படத்துக்காக பலமுறை ஸ்கிரிப்ட் மீட்டிங்களுக்காகச் சந்தித்திருக்கோம்.
இதுவரை நான் நடிச்ச படங்களிலேயே இந்தப் படத்துக்குத்தான் அதிகமுறை ஸ்கிரிப்ட் கேட்டிருப்பேன். இந்தப் படத்துக்கான மீட்டிங் குறைந்தபட்சம் 5 மணி நேரம் நடக்கும். இந்தப் படம் தாமதமாகும்போது எனக்குப் பயமாக இருக்கும்.

ஏன்னா, இந்தக் கதை எனக்கு அவ்வளவு பிடிச்சிருந்தது. இந்தக் கதை என்னை விட்டு போயிடுமோனு பயமாகவும் இருந்துச்சு. தமிழ்தான் என்னுடைய மூன்றாவது மொழி. சிலர் நீங்க தமிழ்தான் அழகாகப் பேசுறீங்க, மலையாளம்கூட கொஞ்சம் ரோலாகுதுனு சொல்வாங்க.
இங்க கோடம்பாக்கத்திலிருந்துதான் சினிமா பிரிஞ்சு போயிருக்கு. இந்தப் படத்துல ஸ்டுடியோ கலாசாரத்தைக் கொண்டாடியிருக்கோம். சமுத்திரக்கனி சார் அவ்வளவு கதைகள் எங்களுக்குச் சொல்வார்.
இந்தப் படத்துல ஐயா கதாபாத்திரத்துல முக்கியமான நபராக தேர்வு பண்ணுங்க. அவரைப் பார்த்த ஐயானு கூப்பிடுற மாதிரி இருக்கணும்னு சொன்னேன். சரியான தேர்வாக கனி சாரை நடிக்க வச்சிருக்காங்க” என்றார்.