எஸ்ஐஆர் எதிர்ப்பு: தமிழகம் முழுவதும் நவ.11-ல் திமுக கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம்

சென்னை: தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் எஸ்ஐஆர் எனப்படும் சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளுக்கு எதிராக நவம்பர் 11-ம் தேதி அனைத்து மாவட்டத் தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று திமுக கூட்டணி கட்சிகள் அறிவித்துள்ளன.

இது குறித்து திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில், “நாட்டில் உள்ள பெரும்பான்மையான அரசியல் கட்சிகள் எஸ்ஐஆருக்கு தொடக்கம் முதலில் இருந்தே எதிர்ப்பு தெரிவித்தும், மத்திய அரசின் கைப்பாவையாகவும், எதேச்சாதிகாரப் போக்குடனும் தேர்தல் ஆணையம் செயல்பட்டு தமிழ்நாட்டில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுவதற்கு சில மாதங்களே உள்ள நிலையில், திமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்த போதிலும் இந்தியத் தேர்தல் ஆணையம் சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் சீராய்வு (S.I.R.) கொண்டு வந்துள்ளது.

சிறுபான்மையினர் வாக்குகள், பாஜக-வின் எதிர்ப்பு வாக்குகள் ஆகியவற்றைக் குறிவைத்து நீக்கும் நோக்கோடு, தகுதியுள்ள வாக்காளர்களை நீக்கி, தகுதியற்ற வாக்காளர்களைச் சேர்க்கும் சதித் திட்டத்தோடு மத்திய பாஜக அரசை தனக்குப் பாதுகாவலாக வைத்துக் கொண்டு தேர்தல் ஆணையம் இதனைச் செய்திட முயன்றிருப்பதோடு, பிஹார் மாநிலத்தில் நடைபெற்ற குளறுபடிகள் எதையும் களையாமல் தமிழ்நாடு உள்ளிட்ட 12 மாநிலங்களில் எஸ்ஐஆர் திட்டத்தைச் செயல்படுத்துவது மக்களின் வாக்கு உரிமையைப் பறிப்பதாகவும், ஜனநாயகத்தை அடியோடு குழி தோண்டி புதைப்பதாகவும் உள்ளது. அத்துடன் தேர்தல் ஆணையத்தின் அவசரமே அதிக சந்தேகத்தை எழுப்புகிறது.

சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் சீராய்வு (எஸ்ஐஆர்) மூலம் தமிழ்நாட்டில் உள்ள உண்மையான வாக்காளர்களின் பெயர்களைப் பட்டியலில் இருந்து நீக்க தேர்தல் ஆணையம் திட்டமிடுகிறது. தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழையின் உச்ச காலமான, கனமழை மற்றும் மோசமான வானிலை எதிர்பார்க்கப்படும் காலத்தில் தமிழ்நாடு வாக்காளர்களில் பெரும்பாலோர் கிராமப்புற மக்களாக, விவசாயிகளாக இருப்பதால், Enumeration Form-களைப் பெற்று நிரப்பி, திருப்பி அளிக்க நேரம் கிடைக்காது. இந்த செயல்முறையில் பெரும் எண்ணிக்கையில் வாக்காளர்கள் நீக்கப்படுவர்.

அதோடு, வருவாய்த் துறையும் கனமழையால் எழும் சூழ்நிலைகளைக் கையாள்வதில் ஈடுபட வேண்டும். எனவே, இந்த காலம் Enumeration-க்கு உகந்த காலம் இல்லை என்று மதச்சார்பற்ற கூட்டணிக் கட்சிகள் தனித்தனியே அறிக்கை விடுத்தும், அனைத்துக் கட்சிகள் கூட்டத்தில் இந்த எஸ்ஐஆர் ஏற்றுக் கொள்ளக்கூடியது அல்ல.

> மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சிகள் எதிர்ப்பார்த்தவாறே நவ.4-ம் தேதியில் இருந்து இன்று வரை களத்தில் எஸ்ஐஆர், பெரும்பாலான வாக்காளர்கள் நீக்கப்படும் அச்சத்தை உறுதிப்படுத்துகிறது. பெரும்பாலான இடங்களில் BLO-க்கள் இன்று வரை கணக்கீட்டு படிவத்தை (Enumeration Form) தரத் துவங்கவில்லை.

> BLO-க்களும், BLA2-க்களுக்கும் இடையே சரியான தகவல் தொடர்புகளை ஏற்படுத்தபடவில்லை. அவர்கள் ஒருங்கிணைக்கப்படவில்லை.

> சில இடங்களில், குறிப்பாக திருப்பூர் மாவட்டத்தில் BLO-க்கள் Enumeration Form-ஐ ஒரு நாளிலேயே பூர்த்தி செய்து தர வலியுறுத்துகிறார்கள்.

> தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள 2002- 2005 வாக்காளர் பட்டியல்கள் முழுமையற்றதாகவும், குழப்பம் விளைவிப்பதாகவும் அமைந்துள்ளன.

எனவே, இந்த எஸ்ஐஆர் சீராய்வை தேர்தல் ஆணையம் உடனே கைவிடும்படி தேர்தல் ஆணையத்துக்கு வேண்டுகோள் விடுத்தும், அதனை செவிமடுக்காத மத்திய பாஜக அரசின் கைப்பாவையாக மாறி, எதேச்சாதிகாரப் போக்கில் இந்தியத் தேர்தல் ஆணையம், தமிழ்நாட்டில் சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் சீராய்வு (எஸ்ஐஆர்) கொண்டு வந்துள்ளதை கண்டித்து மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் வருகிற நவம்பர் 11-ம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று, அனைத்து மாவட்டத் தலைநகரங்களில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்” என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.