ஆப்பிள் சிடர் வினிகர் (Apple Cider Vinegar, ACV) என்பது நொதித்த ஆப்பிள் சாற்றை கொண்டு தயாரிக்கப்படும் ஒரு வினிகர். எடைக்குறைப்பு, சரும பளபளப்பிற்காக பலரும் இதை உணவில் சேர்த்துக்கொள்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.
இதில் அமிலத்தன்மை நிறைந்துள்ளது. அசிட்டிக் ஆசிட் (acetic acid), மாலிக் ஆசிட் (malic acid), லாக்டிக் ஆசிட் (lactic acid), சிட்ரிக் ஆசிட் (citric acid) என்ற நான்கு வகையான அமிலங்கள் இதில் உள்ளன.
சமந்தா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட கதாநாயகிகள்கூட ஆப்பிள் சிடர் வினிகரின் நன்மைகள் பேசியதை அடுத்து, இது இன்னமும் சமூக வலைத்தளங்களில் பிரபலங்களில் தொடங்கி சாமானியர் வரை பிரபலமாகிவிட்டது.

ஆப்பிள் சிடர் வினிகரைப் பயன்படுத்துவதில் உண்மையில் என்ன பயன்கள் உள்ளன என்பதைப் பார்க்கலாம்:
ஆப்பிள் சிடர் வினிகரை சிறிதளவு தூய நீருடன் சேர்த்து முகம் கழுவி வந்தால் சருமம் பளபளவென்று பொலிவடையும். (ஆனால், சோரியாசிஸ், சிரங்கு, சிராய்ப்பு போன்ற சருமப் பிரச்னை உள்ளவர்கள் இதைப் பயன்படுத்தக் கூடாது)
காலை எழுந்ததும் ஒரு கிளாஸ் தண்ணீரில் 5 மி.லி ஆப்பிள் சிடர் வினிகரைக் கலந்து 10 நொடிகள் வரை வாய் கொப்பளிக்க வேண்டும். இப்படிச் செய்தால், கிருமிகள் அழிவதோடு, பற்களிலுள்ள கறைகள் நீங்கி வெண்மையாகப் பளிச்சிடும். (ஆனால், இதை 15 நாள்களுக்கு ஒரு முறை மட்டுமே செய்ய வேண்டும்)

ஆப்பிள் சிடர் வினிகரில் அதிகப்படியான அமிலத்தன்மை உள்ளதால் இதை நேரடியாக அப்படியே சாப்பிடக் கூடாது. பழங்கள் அல்லது காய்கறி சாலட்டுடன் கலந்து சாப்பிடலாம்.
இரண்டு அல்லது மூன்று டீஸ்பூன் ஆப்பிள் சிடர் வினிகரை 100 மி.லி தண்ணீரில் நன்றாகக் கலந்து அருந்தலாம். நேரடியாக அப்படியே சாப்பிடக் கூடாது.