புதுடெல்லி: பள்ளிகள், மருத்துவமனைகள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், விளையாட்டு மைதானங்கள் உள்ளிட்ட அனைத்து அரசு நிறுவனங்களிலும் தெருநாய்கள் நுழைவதைத் தடுக்க முறையாக வேலி அமைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உச்ச நீதிமன்ற நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா, என்.வி. அஞ்சாரியா ஆகியோர் அடங்கிய அமர்வு பிறப்பித்துள்ள உத்தரவில், “பள்ளிகள், மருத்துவமனைகள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், விளையாட்டு மைதானங்கள் உள்ளிட்ட அனைத்து அரசு நிறுவனங்களிலும் தெருநாய்கள் நுழைவதைத் தடுக்க முறையாக வேலி அமைக்க வேண்டும்.
விலங்குகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்துவதற்கான விலங்கு பிறப்பு கட்டுப்பாடு விதிகள் 2023ன்படி, இத்தகைய வளாகங்களில் இருக்கும் தெருநாய்களைப் பிடித்து அவற்றுக்கு தடுப்பூசி போட வேண்டும். மேலும், அவற்றுக்கு கருத்தடை செய்ய வேண்டும். அதன் பிறகு அவற்றை நியமிக்கப்பட்ட தங்குமிடங்களுக்குக் கொண்டு செல்ல வேண்டும். உள்ளூர் அதிகாரிகள் இதற்கு பொறுப்பேற்க வேண்டும். இந்த இடங்களில் இருந்து பிடிக்கப்படும் தெருநாய்களை அதே இடத்தில் விடக்கூடாது. அவ்வாறு விடுவது, தீர்ப்பின் நோக்கத்தையே சீர்குலைக்கும்.
இந்த உத்தரவுகளை அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளும் 8 வாரங்களுக்குள் நிறைவேற்ற வேண்டும். தெருநாய்களை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக அனைத்து மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரேதச அரசுகள் அடுத்த விசாரணை தேதிக்கு முன்பாக பிரமாணப் பத்திரங்களை தாக்கல் செய்ய வேண்டும். இவ்விஷயத்தில், எந்த ஒரு மெத்தனமும் தீவிரமாகக் கருதப்படும்.
தேசிய நெடுஞ்சாலைகள், சாலைகள் மற்றும் விரைவுச் சாலைகளில் இருந்து தெரு நாய்கள் அகற்றப்படுவதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டும். தவறுகளுக்கு அதிகாரிகள் பொறுப்பேற்க வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.