ஐந்து முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி, ஐபிஎல் 2025 தொடரில் 6வது கோப்பையை வெல்லும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், குவாலிஃபையர் 2ல் பஞ்சாப் கிங்ஸ் அணியிடம் படுதோல்வி அடைந்து, ஏமாற்றத்துடன் வெளியேறியது. இந்த தோல்வியைத் தொடர்ந்து, அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் 2026 தொடருக்கான ஏலத்திற்கு முன்பாக, அணியில் சில அதிரடி மாற்றங்களை செய்ய மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. புதிய வீரர்களை அணிக்குள் கொண்டு வரவும், ஏலத்திற்கான நிதி இருப்பை அதிகரிக்கவும், தற்போதைய அணியில் இருந்து சில முக்கிய வீரர்களை கழற்றிவிட மும்பை அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அந்த வகையில், 2026 ஏலத்திற்கு முன்பாக மும்பை இந்தியன்ஸ் அணியால் விடுவிக்கப்பட வாய்ப்புள்ள 5 வீரர்கள் யார் என்று பார்ப்போம்.
Add Zee News as a Preferred Source

தீபக் சாஹர்
கடந்த ஆண்டு நடைபெற்ற மெகா ஏலத்தில், பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ரூ. 9.25 கோடி என்ற பிரம்மாண்ட தொகைக்கு மும்பை இந்தியன்ஸ் அணியால் வாங்கப்பட்டவர் தீபக் சாஹர். 2025 சீசனில், 14 போட்டிகளில் விளையாடிய அவர், 11 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தினார். அவரது எகானமி ரேட் 9.17 ஆக இருந்தது. பேட்டிங்கிலும் அவர் பெரிய அளவில் சோபிக்கவில்லை. 4 போட்டிகளில் பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைத்து, வெறும் 37 ரன்களை மட்டுமே எடுத்தார். அவரது அதிக விலை மற்றும் சுமாரான செயல்திறன் காரணமாக, அவரை விடுவிக்க மும்பை அணி நிர்வாகம் பரிசீலித்து வருகிறது.
முஜீப் உர் ரஹ்மான்
ஆப்கானிஸ்தானை சேர்ந்த சுழற்பந்து வீச்சாளரான முஜீப் உர் ரஹ்மான், காயமடைந்த அல்லாஹ் கஸன்ஃபருக்கு பதிலாக, மாற்று வீரராக அணிக்குள் கொண்டு வரப்பட்டார். பஞ்சாப் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்காக விளையாடிய அனுபவம் கொண்ட இவர், 2025 சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஒரே ஒரு போட்டியில் மட்டுமே விளையாடினார். அந்த போட்டியில், 2 ஓவர்கள் பந்துவீசி 28 ரன்களை விட்டுக்கொடுத்து, ஒரு விக்கெட்டை மட்டுமே வீழ்த்தினார். அவருக்கு போதிய வாய்ப்புகள் வழங்கப்படாததால், அவரை விடுவித்துவிட்டு வேறு ஒரு வீரரை அணிக்குள் கொண்டு வர மும்பை அணி திட்டமிடலாம்.
ரீஸ் டாப்லி
இங்கிலாந்தை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளரான ரீஸ் டாப்லியை, மும்பை இந்தியன்ஸ் அணி ரூ. 75 லட்சத்திற்கு ஏலத்தில் எடுத்தது. ஆனால், அவருக்கும் ஒரே ஒரு போட்டியில் மட்டுமே விளையாட வாய்ப்பு கிடைத்தது. அந்த போட்டியில், 3 ஓவர்கள் பந்துவீசி விக்கெட் எதுவும் எடுக்காமல், 40 ரன்களை வாரி வழங்கினார். அவரது இந்த மோசமான செயல்திறன், அவரை அணியிலிருந்து விடுவிப்பதற்கான முக்கிய காரணமாக அமையலாம்.
ராபின் மின்ஸ்
ஜார்க்கண்டை சேர்ந்த விக்கெட் கீப்பர்-பேட்டரான ராபின் மின்ஸை, மும்பை அணி கடந்த மெகா ஏலத்தில் ரூ. 65 லட்சத்திற்கு வாங்கியது. 2025 சீசனில் இரண்டு போட்டிகளில் விளையாட அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால், அந்த இரண்டு போட்டிகளிலும் தலா 3 ரன்கள் என மொத்தம் 6 ரன்களை மட்டுமே எடுத்து அவர் ஏமாற்றமளித்தார்.
கரண் சர்மா
ஐபிஎல் வரலாற்றில், மூன்று வெவ்வேறு அணிகளுடன் கோப்பையை வென்ற ஒரே வீரர் என்ற பெருமைக்குரிய கரண் சர்மாவை, மும்பை இந்தியன்ஸ் அணி ரூ. 50 லட்சத்திற்கு வாங்கியது. 2025 சீசனில் 6 போட்டிகளில் விளையாடிய அவர், 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அவரது செயல்திறன் ஓரளவு திருப்திகரமாக இருந்தாலும், அணியில் உள்ள மற்ற சுழற்பந்து வீச்சாளர்களைக் கருத்தில் கொண்டு, அவரை விடுவிக்க அணி நிர்வாகம் முடிவு செய்யலாம்.
About the Author
RK Spark