மூத்த குடிமக்களின் நல்வாழ்வுக்கான 'அன்புச்சோலை' திட்டம் – முதல்வர் திருச்சியில் நாளை தொடங்கிவைக்கிறார்

சென்னை: புதுக்கோட்டை, திருச்சி மாவட்டங்களில் முதல்வர் ஸ்டாலின் இரண்டு நாள் கள ஆய்வுப் பயணம் மேற்கொள்கிறார். புதுக்கோட்டை மாவட்டத்தில் 10.11.2025 அன்று ரூ.767 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார். திருச்சியில் மூத்த குடிமக்களின் நல்வாழ்வை மேம்படுத்திட முதியோர் மனமகிழ் வளமையம் அன்புச்சோலை திட்டத்தைத் தொடங்கி வைக்கிறார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘தமிழக முதல்வர் அனைத்து மாவட்டங்களிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கள ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், இரண்டு நாள் பயணமாக புதுக்கோட்டை, திருச்சி மாவட்டங்களில் கள ஆய்வு மேற்கொள்ள இருக்கிறார்.

பல்வேறு புதிய திட்டங்களைச் செயல்படுத்தி நாளொரு திட்டம், பொழுதொரு சாதனை என வளர்த்துவரும் முதல்வர் ஸ்டாலின், மூத்த குடிமக்களின் நல்வாழ்வை மேம்படுத்துவற்காக, வீடுகளில் உள்ள முதியவர்கள் மனம் சோர்வடையாமல் ஊக்கம் பெற உதவும் வகையில் தற்போது உருவாக்கியுள்ள புதிய திட்டம் “அன்புச்சோலை திட்டம்”.

முதல்வர் ஸ்டாலின் மூத்த குடிமக்களின் நல்வாழ்வை மேம்படுத்துவதற்காக, “அன்புச்சோலை – முதியோர் மனமகிழ் வள மையம்” என்ற திட்டத்தை திருச்சி மாநகரில் 10.11.2025 அன்று பகல் 12.30 மணியளவில் தொடங்கி வைக்கிறார்.

ஆதரவற்ற மற்றும் கைவிடப்பட்ட முதியோர்களுக்காக முதியோர் இல்லங்கள், ஒருங்கிணைந்த வளாக இல்லங்கள், நடமாடும் மருத்துவ அலகுகள் மற்றும் ஓய்வூதியத் திட்டங்கள் உள்ளிட்ட மூத்த குடிமக்களுக்கான பல்வேறு நலத்திட்டங்களைத் திராவிட மாடல் அரசு தீவிரமாகச் செயல்படுத்தி வருகிறது. தற்போது தொடங்கப்படும் “அன்புச்சோலை – முதியோர் மனமகிழ் வள மையங்கள்” திட்டம் மூத்த குடிமக்களின் ஆரோக்கியமான வளர்ச்சியில் கவனம் செலுத்தும் வகையில் சமூக மையங்களாகச் செயல்படும்.

மதுரை, கோவை, திருச்சி, சேலம், திருப்பூர், ஈரோடு, தூத்துக்குடி, வேலூர், தஞ்சாவூர், திண்டுக்கல் ஆகிய 10 மாநகராட்சிகளில் தலா இரண்டு வீதம் 20 அன்புச்சோலைகள், தொழில்துறை மாவட்டங்களான ராணிப்பேட்டையிலும் கிருஷ்ணகிரியிலும் 2 அன்புச்சோலைகள், பெருநகர சென்னை மாநகராட்சியில் தண்டையார்பேட்டை, சோழிங்கநல்லூர், விருகம்பாக்கம் ஆகிய இடங்களில் 3 அன்புச்சோலைகள் என மொத்தம் 25 ”அன்புச்சோலை” மையங்கள் ரூ.10 கோடி மதிப்பீட்டில் தொடங்கப்பட்டு பொழுதுபோக்கு அம்சங்கள், யோகா, நூலகம் மற்றும் தேவையான திறன் மேம்பாடு சேவைகள் வழங்கப்படுகின்றன.

அன்புச்சோலை திட்டம், முதியோர்கள் மதிக்கும் தமிழ்ப் பாரம்பரியத்தைப் பிரதிபலிக்கிறது. குடும்பங்கள் முதன்மைப் பராமரிப்பாளர்களாகத் தொடர்வதற்கு அரசாங்கம் இத்திட்டத்தின் மூலம் துணைபுரிகிறது.

முதல்வர் ஸ்டாலின், “முதியோர்கள்தான் சமுதாயத்தின் வழிகாட்டும் சக்தி. இன்றைய தமிழ்நாட்டை உருவாக்க தங்கள் வாழ்நாளை அர்ப்பணித்தவர்கள். அவர்கள் கண்ணியத்துடனும், பராமரிப்புடனும், மகிழ்ச்சியுடனும் வாழ்வதை உறுதி செய்வது எமது கடமை.

அன்புச்சோலை மையம் மூத்த குடிமக்கள் நலன் கருதி பல்வேறு அம்சங்கள் கொண்டு, தமிழ்நாடு அரசின் நிதியுதவியுடன் பகலில் மட்டும் இயங்கும் மையமாகச் செயல்படும். ஒவ்வொரு மையமும் குறைந்தபட்சம் 50 மூத்த குடிமக்கள் பயன்பெறும் வகையில் போதிய இடவசதி, போதுமான உட்கட்டமைப்பு வசதிகளைக் கொண்டிருக்கும். இந்தப் பகல்நேரப் பராமரிப்பு மையங்களில், முதியவர்கள் தோழமை மற்றும் அர்த்தமுள்ள செயல்பாடுகளில் ஈடுபடலாம். அன்புச்சோலை மையங்களுக்கு முதியோர்கள் சென்றுவர போக்குவரத்து வசதியுள்ள இடங்களில்தான் இம்மையங்கள் அமைக்கப்படுகின்றன.

அன்புச்சோலை மையங்களுக்கு வருகை தரும் முதியவர்களுக்குத் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் ஆதரவுடன் மதிய உணவு மற்றும் சிற்றுண்டி வழங்கப்படும். தகுதி வாய்ந்த பராமரிப்பாளர்கள் மற்றும் இயன்முறை சிகிச்சையாளர்கள் பணியமர்த்தப்பட்டு முதியோரின் விரிவான பராமரிப்பு உறுதி செய்யப்படும்.

அன்புச்சோலை மூலமாக, முதியோர் குடும்பப் பிணைப்பைத் தொடர்ந்தே, பாதுகாப்பான சூழலில், அர்த்தமுள்ளதாக பகல் நேரங்களைக் கழிக்க முடியும். இது, கருணைமிக்க மற்றும் சமூக நீதியினை உள்ளடக்கிய தமிழ்நாட்டிற்கான எமது அரசின் பார்வையைப் பிரதிபலிக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்கள்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா:

முதல்வர் ஸ்டாலின் இரண்டு நாள் பயணமாக புதுக்கோட்டை, திருச்சி ஆகிய மாவட்டங்களில் கள ஆய்வு மேற்கொள்கிறார்கள். முதல்வர் ஸ்டாலின் புதுக்கோட்டை மாவட்டத்தில் 10.11.2025 திங்கள் கிழமை காலை 11 மணியளவில் கீரனூர் மூகாம்பிகை பொறியியல் கல்லூரித் திடலில் நடைபெறும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்கிறார்கள்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில் திராவிட மாடல் அரசின் சார்பில் இதுவரை ரூ.11,481 கோடி மதிப்பீட்டில் 38,35,669 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கியுள்ளார். ரூ.2,800 கோடியில் 62,088 வளர்ச்சித் திட்டப் பணிகளை நிறைவேற்றியுள்ளார்.

முதல்வர் ஸ்டாலின் 10.11.2025 திங்கள் கிழமை காலை 11 மணியளவில் நடைபெறும் விழாவில் 767 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டுதல், முடிவுற்ற பணிகளைத் தொடங்கி வைத்தல் ஆகியவற்றுடன் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளையும் வழங்குகிறார்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.