சசாரம்: பிஹாரில் தொழில்துறைக்கான வழித்தடம் அமைக்க விரும்பிய பிரதமர் மோடியைப் போலல்லாமல், இண்டியா கூட்டணி ஊடுருவல்காரர்களுக்கான வழித்தடம் அமைக்க முயற்சிக்கின்றனர் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குற்றம் சாட்டினார்.
பிஹார் சட்டப்பேரவை இரண்டாம் கட்ட தேர்தலின் இறுதி நாள் பிரச்சாரத்துக்காக சசாரத்தில் உரையாற்றிய அமித் ஷா, “பாகிஸ்தான் மீது வீசப்படும் மோர்டார் குண்டுகள் இந்த மாநிலத்தில் உள்ள ஒரு ஆயுதத் தொழிற்சாலையில் தயாரிக்கப்படும். சமீபத்தில், ராகுல் மற்றும் லாலுவின் மகன் தேஜஸ்வி யாதவ் ‘வாக்காளர் அதிகார யாத்திரை’ மேற்கொண்டனர். பிஹாரில் வசிக்கும் ஏழைகள், தலித்துகள் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் வாழ்க்கையில் எந்த முன்னேற்றத்தையும் ஏற்படுத்துவதை இது நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை. இது ஊடுருவல்காரர்களைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டது.
பிஹாரில் தொழில்துறைக்கான வழித்தடம் அமைக்க விரும்பிய பிரதமர் நரேந்திர மோடியைப் போலல்லாமல், இண்டியா கூட்டணி ஊடுருவல்காரர்களுக்கான வழித்தடம் அமைக்க முயற்சிக்கின்றனர். ஊடுருவல்காரர்கள் உங்கள் மாநில இளைஞர்களின் வேலைகளை திருடுகிறார்கள். அவர்கள் உங்கள் மாநிலத்தில் ஏழைகளுக்கான ரேஷன் பொருட்களை திருடுகிறார்கள். அவர்கள் நம் நாட்டில் பாதுகாப்பற்ற நிலையை உருவாக்குகிறார்கள்.
மன்மோகன் சிங், சோனியா காந்தி மற்றும் லாலு தலைமையிலான மத்திய அரசு இருந்தபோது, பயங்கரவாதிகள் நமது மண்ணில் விருப்பப்படி தாக்குதல் நடத்தினர். இதற்கு நேர்மாறாக, இப்போது நாங்கள் பயங்கரவாதிகளை அவர்களின் வீடுகளுக்குள் புகுந்து அடித்து நொறுக்குகிறோம்” என்று கூறினார்.