திருச்சி: “எஸ்.ஐ.ஆருக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் திமுக மனு தாக்கல் செய்துள்ளது. அதில் தங்களையும் இணைத்துக் கொள்ள வேண்டும் என அதிமுகவும் மனு தாக்கல் செய்துள்ளது. கபட நாடகத்தை நடத்த அதிமுக திட்டமிட்டுள்ளது. உண்மையான அக்கறை இருந்தால் அவர்கள் ஏற்கெனவே வழக்கு தொடர்ந்திருக்க வேண்டும்.” என தமிழக மு.க.முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதி திமுக எம்எல்ஏ இளைய மகன் திருமண விழா சோமரசம்பேட்டையில் நடைபெற்றது. முதல்வர் ஸ்டாலின் திருமணத்தை முன் நின்று நடத்தி வைத்தார். அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஸ், ரகுபதி, மெய்யநாதன், சிவசங்கர், கீதா ஜீவன், எம்பிக்கள் அ.ராசா, திருச்சி சிவா, துரை வைகோ உட்பட பலர் பங்கேற்றனர்.
திருமண விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: ஸ்ரீரங்கம் எம்எல்ஏ பழனியாண்டி திருமணத்தை கலைஞர் நடத்தி வைத்தார். அவரது மகன்கள் திருமணத்தை நான் நடத்தி வைத்தேன். அவர்களது பேரன், பேத்திகள் திருமணத்தையும் நான்தான் நடத்தி வைப்பேன் என்ற நம்பிக்கை வந்திருக்கிறது.

திமுகவை கழகம் என்று மட்டுமல்ல இயக்கம் என கூறுவார்கள். இயக்கம் என்பதால் நமக்கு ஓய்வே கிடையாது. ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் தொடர்ந்து இயங்கி கொண்டு இருப்பது தான் இயக்கம். சின்ன தடைகளைப் பார்த்து தேங்கினால் தேக்கம் ஆகிவிடும். தொடர்ந்து இயங்கிக் கொண்டே இருக்க வேண்டும் என்று விரும்புபவன் நான்.
நம்மை அழிக்க எதிரிகள் புதுப்புது உத்திகளையும், முயற்சிகளையும் செய்து வருகிறார்கள். வருமான வரித் துறை, சிபிஐ என ஏவினார்கள். தற்போது எஸ்.ஐ.ஆர் என்கிற ஆயுதத்தை எடுத்து திமுக-வை அழிக்கப் பார்க்கிறார்கள். ஆனால் ஒரு போதும் திமுகவை அவர்களால் அழிக்க முடியாது.
முத்தரையர் சமுதாயத்தினர் மீது கடைக்கண் பார்வையை திருப்புங்கள் என்று அச்சமூகத்தின் பிரதிநிதி செல்லக்குமார் பேசினார். உங்களுக்கு கடைக்கண் பார்வை மட்டுமல்ல, எல்லா பார்வையும் உங்கள் பக்கம் இருக்கிறது. திராவிட மாடல் ஆட்சி என்பது எல்லோருக்கும் எல்லாம் என்பது தான். அனைவருக்குமான ஆட்சியாக இந்த ஆட்சி உள்ளது.
டெல்லியில் இருக்கும் பிக்பாஸூக்கு பழனிசாமி ஆமாம் சாமி போட்டு தான் ஆக வேண்டும். எஸ்.ஐ.ஆருக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் திமுக மனு தாக்கல் செய்துள்ளது. அதில் தங்களையும் இணைத்துக் கொள்ள வேண்டும் என அதிமுகவும் மனு தாக்கல் செய்துள்ளார்கள். கபட நாடகத்தை நடத்த அதிமுக திட்டமிட்டுள்ளது. உண்மையான அக்கறை இருந்தால் அவர்கள் ஏற்கெனவே வழக்கு தொடர்ந்திருக்க வேண்டும். பாஜக என்ன கூறினாலும் அதை அதிமுகவினர் ஆதரிக்கிறார்கள். அதிமுகவின் நோக்கம் ஒருபோதும் நிறைவேறாது.
மணமக்கள் நீடுழி வாழவேண்டும். தங்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு அழகிய தமிழ்ப் பெயர்களை வைக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.