ஐபிஎல் 2026 சீசனுக்கான வீரர்கள் பரிமாற்ற பேச்சுவார்த்தைகள் சூடுபிடித்துள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையே ஒரு மெகா டிரேட் குறித்த தகவல்கள் வெளியாகி கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. சிஎஸ்கே அணியின் கேப்டன் எம்.எஸ். தோனியின் வாரிசாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சனை அணிக்குள் கொண்டு வர சிஎஸ்கே நிர்வாகம் தீவிரமாக உள்ளது. இதற்காக, தனது நட்சத்திர வீரரான ரவீந்திர ஜடேஜாவை ராஜஸ்தான் அணிக்கு அனுப்பவும் சிஎஸ்கே சம்மதித்துள்ளது. ஆனால், இந்த ஒப்பந்தத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஒரு புதிய நிபந்தனையை விதித்துள்ளதால், இந்த மெகா டிரேட் நிறைவேறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
Add Zee News as a Preferred Source

தோனியின் வாரிசு தேடல்
சிஎஸ்கே அணியின் தூணாக விளங்கும் 44 வயதான எம்.எஸ். தோனி, தனது கிரிக்கெட் வாழ்க்கையின் இறுதி கட்டத்தில் இருப்பதால், அவருக்கு பதிலாக ஒரு திறமையான இந்திய விக்கெட் கீப்பர்-பேட்டரை உருவாக்கும் கட்டாயத்தில் சிஎஸ்கே உள்ளது. இந்த இடத்திற்கு சஞ்சு சாம்சன் மிகவும் பொருத்தமானவராக இருப்பார் என அணி நிர்வாகம் கருதுகிறது. சஞ்சு சாம்சனும், ஏழு ஆண்டுகளாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடனான தனது பயணத்தை முடித்து கொண்டு, சிஎஸ்கே அணிக்கு செல்ல விரும்புவதாக ராஜஸ்தான் நிர்வாகத்திடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக, தனது வரலாற்றில் முதல் முறையாக வீரர்களை நேரடியாக பரிமாற்றம் செய்யும் இந்த ஒப்பந்தத்திற்கு சிஎஸ்கே ஒப்புக்கொண்டுள்ளது.
ஜடேஜாவின் வெளியேற்றம்
இந்த ஒப்பந்தத்தின் அதிர்ச்சிகரமான அம்சம், சிஎஸ்கே அணியின் செல்லப்பிள்ளையும், 2023 ஐபிஎல் இறுதி போட்டியின் நாயகனுமான ரவீந்திர ஜடேஜாவை அணிமாற்றம் செய்ய சிஎஸ்கே ஒப்புக்கொண்டது தான். 18 கோடி ரூபாய் மதிப்புள்ள ஜடேஜாவை விட்டுக்கொடுக்கும் இந்த முடிவு, அணி நிர்வாகத்தால் எளிதாக எடுக்கப்படவில்லை. எம்.எஸ். தோனி, ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் ஸ்டீபன் ஃபிளெமிங் உள்ளிட்ட சிஎஸ்கே-வின் முக்கிய நபர்கள் ஜடேஜாவுடன் நீண்ட நேரம் விவாதித்து, அவரது சம்மதத்தை பெற்ற பிறகே இந்த முடிவை எடுத்துள்ளனர். இது, சஞ்சு சாம்சனை அணிக்குள் கொண்டு வருவதில் சிஎஸ்கே எவ்வளவு தீவிரமாக இருக்கிறது என்பதைக் காட்டுகிறது.

ராஜஸ்தானின் நிபந்தனை
சஞ்சு சாம்சனுக்கு பதிலாக ரவீந்திர ஜடேஜா என்ற ஒப்பந்தம் கிட்டத்தட்ட உறுதியான நிலையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இரண்டாவது வீரராக ஒருவரையும் சிஎஸ்கேவிடம் இருந்து கேட்டுள்ளது. முதலில், ஆல்-ரவுண்டர் ஷிவம் துபேவின் பெயரை ராஜஸ்தான் முன்மொழிந்தது, ஆனால் சிஎஸ்கே நிர்வாகம் அதை உடனடியாக நிராகரித்துவிட்டது. இதையடுத்து, சிஎஸ்கே இங்கிலாந்து ஆல்-ரவுண்டரான சாம் கரனை இரண்டாவது வீரராக வழங்க முன்வந்தது. ஆனால், இதில் ராஜஸ்தான் அணி முழு திருப்தி அடையவில்லை என்று கூறப்படுகிறது. தற்போது, இளம் இலங்கை வேகப்பந்து வீச்சாளரான மதீஷா பத்திரனா வேண்டும் என ராஜஸ்தான் அணி கடுமையாக அழுத்தம் கொடுத்து வருகிறது. சிஎஸ்கே அணி, பத்திரனாவை எதிர்காலத்தின் முக்கிய வீரராக கருதி, அவரை நீண்டகாலமாக பயிற்றுவித்து வருவதால், அவரை விட்டுக்கொடுக்க தயாராக இல்லை.
நிறைவேறுமா இந்த மெகா டிரேட்?
தற்போது, இந்த மெகா டிரேட்டின் எதிர்காலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கையில் தான் உள்ளது. சாம் கரனை இரண்டாவது வீரராக ஏற்றுக்கொண்டால் இந்த ஒப்பந்தம் வெற்றிகரமாக முடியும். இல்லையெனில், பத்திரனாவுக்காக ராஜஸ்தான் தொடர்ந்து வற்புறுத்தினால், இந்த வரலாற்று சிறப்புமிக்க வீரர் பரிமாற்றம் மொத்தமாக ரத்தாக கூட வாய்ப்புள்ளது. இந்த ஒப்பந்தம் நடந்தால், 2012 முதல் சிஎஸ்கேவுடனான ஜடேஜாவின் நீண்ட பயணமும், 2013 முதல் ராஜஸ்தானுடனான சாம்சனின் உறவும் முடிவுக்கு வரும்.
About the Author
RK Spark