ஐபிஎல் கிரிக்கெட் வட்டாரத்தில் ஒரு புதிய பரபரப்பு, தீயாக பரவி வருகிறது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சனை, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கொண்டு வரும் மெகா டிரேட் குறித்த பேச்சு வார்த்தைகள் கிட்டத்தட்ட உறுதியாகியுள்ள நிலையில், தல தோனியின் ஐபிஎல் எதிர்காலம் குறித்த விவாதங்களும் சூடுபிடித்துள்ளன. சிஎஸ்கேவுக்கு ஒரு தகுதியான வாரிசு கிடைத்துவிட்டால், தோனி உடனடியாக ஓய்வு பெறுவார் என முன்னாள் இந்திய வீரர் முகமது கைஃப் கூறியுள்ளது, சிஎஸ்கே ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Add Zee News as a Preferred Source

கைஃபின் பரபரப்பு கணிப்பு
இது குறித்து தனது யூடியூப் பக்கத்தில் பேசியுள்ள முகமது கைஃப், “தோனி ஒரு தகுதியான வாரிசுக்காகத்தான் இத்தனை நாட்கள் காத்திருந்தார். தற்போது சஞ்சு சாம்சன் சிஎஸ்கே அணிக்கு வருவது உண்மையானால், அடுத்த சீசன் தான் தோனியின் கடைசி ஐபிஎல் தொடராக இருக்கும். ஒருவேளை, தொடரின் பாதியிலேயே கூட, சஞ்சு அணியில் செட்டில் ஆன பிறகு, தனது பொறுப்புகளை அவரிடம் ஒப்படைத்துவிட்டு தோனி ஓய்வை அறிவிக்க வாய்ப்புள்ளது,” என்று கூறியுள்ளார். சிஎஸ்கே தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன், தோனி அடுத்த சீசனிலும் விளையாடுவார் என்று முன்பே தெரிவித்திருந்தாலும், கைஃபின் இந்தக் கருத்து, ஓய்வு குறித்த சந்தேகங்களுக்கு மேலும் வலு சேர்த்துள்ளது.
மெகா டிரேட் பின்னணி
சஞ்சு சாம்சனை சிஎஸ்கே அணிக்குள் கொண்டு வர, தனது நட்சத்திர வீரரான ரவீந்திர ஜடேஜா மற்றும் ஆல்-ரவுண்டர் சாம் கரண் ஆகியோரை ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு விட்டுக்கொடுக்க சிஎஸ்கே நிர்வாகம் சம்மதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக, ஜடேஜாவுடன் தென்னாப்பிரிக்காவின் இளம் அதிரடி வீரர் டெவால்ட் ப்ரீவிஸையும் ராஜஸ்தான் அணி கேட்டதாகவும், பின்னர் நடந்த பேச்சு வார்த்தைகளில் தற்போதைய ஒப்பந்தம் எட்டப்பட்டதாகவும் கூறப்படுகிறது. சஞ்சு சாம்சனை வாங்க டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் தீவிரமாக முயன்றது, ஆனால், வீரர் பரிமாற்றத்தில் உடன்பாடு ஏற்படாததால் அது கைகூடவில்லை.
ஒரு சகாப்தத்தின் முடிவு?
2008-ம் ஆண்டு ஐபிஎல் தொடங்கியதிலிருந்து, சிஎஸ்கே அணியின் முகமாகவும், ஆன்மாகவும் இருந்து வருபவர் எம்.எஸ். தோனி. அவருடன் சேர்ந்து ஜடேஜாவும் தனது ஐபிஎல் பயணத்தை அதே ஆண்டு தான் தொடங்கினார். தற்போது, சஞ்சு சாம்சனுக்காக ஜடேஜாவையும் விட்டுக்கொடுக்க சிஎஸ்கே தயாராகிவிட்டது. தோனியின் வாரிசாக சாம்சன் வந்துவிட்டால், தோனியின் சகாப்தம் முடிவுக்கு வரும் என்பது கைஃபின் உறுதியான கணிப்பாக உள்ளது. ஐபிஎல் அணிகள், தாங்கள் தக்கவைக்கும் வீரர்களின் பட்டியலை நவம்பர் 15-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். எனவே, அதற்கு முன்பாக சஞ்சு சாம்சனின் அணி மாற்றம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அறிவிப்பு, தோனியின் ஓய்வு குறித்த செய்தியையும் உறுதி செய்யக்கூடும் என்பதால், சிஎஸ்கே ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பு கலந்த சோகத்துடன் காத்திருக்கின்றனர்.
About the Author
RK Spark