திம்பு,
2 நாள் அரசு முறைப் பயணமாக பூடான் நாட்டிற்கு டெல்லியில் இருந்து பிரதமர் மோடி புறப்பட்டு சென்றார். அந்நாட்டு தலைநகர் திம்புவில் விமான நிலையத்தில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதமர் மோடியை பூடான் பிரதமர் ஷெரிங் டோப்கே வரவேற்றார்.
இந்தியாவின் உதவியுடன் கட்டப்பட்ட 1,020 மெ.வா.நீர்மின் நிலையத்தை அந்நாட்டு மன்னருடன் சேர்ந்து பிரதமர் மோடி திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து விழாவில் பிரதமர் மோடி பேசியதாவது:-
டெல்லியில் நேற்று நடந்த கொடூர சம்பவத்தால், கனத்த இதயத்தோடு பூடான் வந்திருக்கிறேன். பாதிக்கப்பட்ட குடும்பங்களின் துயரத்தை நான் புரிந்துகொள்கிறேன். முழு தேசமும் அவர்களோடு நிற்கிறது. இந்த சதித்திட்டத்தின் அடியாழத்தை எங்களது விசாரணை அமைப்புகள் கண்டுபிடிக்கும். சதிகாரர்களை தப்பவிடமாட்டோம். காரணமான அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள்.
இந்தியாவும், பூடானும் இணைந்து ஒரு செயற்கைக்கோளையும் உருவாக்கி வருகிறோம். இது இந்தியா மற்றும் பூட்டான் ஆகிய இரு நாடுகளுக்கும் மிக முக்கியமான சாதனையாகும். இந்தியா-பூட்டான் உறவுகளின் முக்கிய பலம் நமது மக்களுக்கு இடையிலான இருக்கும் ஆன்மீக தொடர்பு.
இரண்டு மாதங்களுக்கு முன்பு, இந்தியாவின் ராஜ்கிரில் ராயல் பூட்டான் கோவில் திறக்கப்பட்டது. இப்போது, இந்த முயற்சி இந்தியாவின் பிற பகுதிகளுக்கும் விரிவடைந்து வருகிறது. பூட்டான் மக்கள் வாரணாசியில் ஒரு பூட்டான் கோவில் மற்றும் விருந்தினர் மாளிகையை விரும்பினர். இதற்கு தேவையான நிலத்தை இந்திய அரசு வழங்கி உள்ளது.
இந்த கோவில்கள் மூலம், நமது விலைமதிப்பற்ற மற்றும் வரலாற்று உறவுகள் மற்றும் கலாசார உறவுகளை மேலும் வலுப்படுத்துகிறோம். இந்தியாவும் பூட்டானும் அமைதி, செழிப்பு மற்றும் பகிரப்பட்ட முன்னேற்றத்தின் பாதையில் தொடர வேண்டும் என்று நான் விரும்புகிறேன். பகவான் புத்தர் மற்றும் குரு ரின்போச்சின் ஆசீர்வாதங்கள் நமது இரு நாடுகளிலும் நிலைத்திருக்கட்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.