நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் ஏ.எஸ்.பி-யாக பணியாற்றய பல்வீர்சிங் ஐ.பி.எஸ், விசாரணைக் கைதிகளின் பற்களை பிடுங்கி சித்ரவதை செய்ததாக எழுந்த புகார் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அதைத் தொடர்ந்து, இப்புகாரை விசாரித்த சி.பி.சி.ஐ.டி., பல்வீர்சிங் மீது வழக்கு பதிவு செய்து, நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
இந்நிலையில், ஐ.பி.எஸ். அலுவலர் பல்வீர்சிங் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில்,
“அம்பாசமுத்திரம், வி.கே.புரம், கல்லிடைக்குறிச்சி, பாப்பாக்குடி, மணிமுத்தாறு ஆகிய பகுதிகளில் சிறப்பாக பணியாற்றி இருக்கிறேன். இதற்காக தமிழக காவல்துறை தலைவரிடம் பாராட்டு சான்றிதழையும் பெற்றுள்ளேன்.
என் பணிக்காலத்தில் கஞ்சா மற்றும் போதைப்பொருட்கள் கடத்துவதை தடுத்திருக்கிறேன். என்னை இந்த பொறுப்பிலிருந்து அகற்றும் நோக்கில் பொய்யான பல புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன. சட்டவிரோதக் காவலில் வைத்து அருண்குமார் என்பவரது பல்லை உடைத்ததாக கூறப்படும் வழக்கும் அவ்வாறே பதிவு செய்யப்பட்டுள்ளது
இவ்வாறாக என் மீது பதிவுசெய்யப்பட்ட 4 வழக்குகளில் கீழமை நீதிமன்றத்தில் சி.பி.சி.ஐ.டி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ததன் அடிப்படையில் என் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆகவே அந்த குற்றச்சாட்டுகளை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்” எனக் கூறியிருந்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதி சபிக் அகமது, “மனுதாரர் பணியாற்றிய இடங்களில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் கடத்தப்படுவதை தடுத்து நடவடிக்கை எடுத்திருக்கிறார். இதற்காக உயர் அதிகாரியின் பாராட்டையும் பெற்றிருக்கிறார்.
இந்த நிலையில் உதவி ஆய்வாளர் புகாரின் அடிப்படையில் எவ்வாறு அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது? இப்படி செய்தால் அதிகாரிகள் எவ்வாறு நேர்மையாக பணியாற்ற முன்வருவார்கள்?” எனக் கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து, ‘மனுதாரர் தரப்பில் தன் மீது பதியப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு தடை கோரி விண்ணப்பிக்கவும், சி.பி.சி.ஐ.டி தரப்பில் மனுதாரர் மீது பதியப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய’ உத்தரவிட்ட நீதிபதி, “அவர் மீதான குற்றச்சாட்டுகளை நிரூபிக்கத் தவறினால் ரூ 20 லட்சம் வரை அபராதம் விதிக்க நேரிடும்” என குறிப்பிட்டு வழக்கை நவம்பர் 21 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.