சிவகாசி: சூடுபிடிக்கும் ரயில்வே மேம்பால விவகாரம்: "எங்கள் ஐயா மோடி; எங்கள் டாடி!" – ராஜேந்திர பாலாஜி

சிவகாசியில் அ.தி.மு.க வாக்குச்சாவடி முகவர்களுக்கான பயிற்சி முகாமில் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, “புதிதாகக் கட்டப்பட்டு திறக்கப்பட்டுள்ள சிவகாசி சாட்சியாபுரம் ரயில்வே மேம்பாலம் போன்ற விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ரயில்வே மேம்பாலங்களுக்கு எல்லாம் அனுமதி பெற்றது அ.தி.மு.க ஆட்சி காலத்தில்தான்.

உங்களால் (தி.மு.க-வினால்) மத்திய அரசிடம் இருந்து அனுமதி பெற முடியுமா? மத்திய அரசில் ஆட்சியில் இருப்பது உங்கள் ஐயா இல்லை, எங்கள் ஐயா மோடி. எங்கள் டாடிதான் அதிகாரத்தில் உள்ளார். மாணிக்கம் தாகூர் எம்.பி-யால் ரயில்வே மேம்பாலத்திற்கு அனுமதி வாங்க முடியுமா? ஆட்டுக்கு தாடி எப்படி தேவை இல்லையோ அதேபோல நாட்டுக்கு காங்கிரஸ் தேவையில்லை” என்றார்.

அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
ராஜேந்திர பாலாஜி

விருதுநகர் மாவட்டம், சிவகாசி – ஸ்ரீவில்லிபுத்தூர் சாலையில் சாட்சியாபுரம் ரயில்வே கேட் பகுதியில் ரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும் என்பது சிவகாசி மக்களின் 30 ஆண்டுகால கோரிக்கையாக இருந்து வந்தது.

ரயில்வே மேம்பாலம் இல்லாமல் பள்ளி கல்லூரி மாணவ மாணவியர் மற்றும் பட்டாசு, அச்சக தொழிலாளர்கள் பொதுமக்கள் கடும் சிரமத்தைச் சந்தித்து வந்தனர். இந்நிலையில் கடந்த 2018 ஆம் ஆண்டு முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தலைமையில் நிதி ஒதுக்கீடு செய்து பூமி பூஜை செய்யப்பட்டது.

பின்னர் பல நாள்கள் கிடப்பில் போடப்பட்ட இந்தப் பணி 2024 ஆம் ஆண்டு, ஜூலை மாதம் ரூ. 61 கோடி ரூபாய் மதிப்பீட்டில் துவங்கப்பட்டது.

அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
ராஜேந்திர பாலாஜி

700 மீட்டர் நீளமும், 12 மீட்டர் அகலமும் கொண்ட இந்த ரயில்வே மேம்பாலத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று காணொளி காட்சி மூலம் மக்கள் பயன்பாட்டிற்குத் திறந்து வைத்தார். பின்னர் இந்த மேம்பாலத்திற்குச் சுதந்திரப் போராட்ட தியாகியும், மொழி போராட்ட வீரருமான சங்கரலிங்கனார் பெயர் சூட்டப்படும் என அறிவித்தார்.

தற்போது சிவகாசி சாட்சியாபுரம் ரயில்வே மேம்பாலம் அமைவதற்குக் காரணம் நாங்கள் தானே என இரு கட்சியைச் சேர்ந்த ஐடி விங்-களும் சமூக வலைத்தளங்களில் வார்த்தை போரில் ஈடுபட்டுள்ளன. வார்த்தை போருக்கு வலுவூட்டும் விதமாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியும் இப்படிப் பேசியுள்ளது பெரும் பேசுபொருளகியுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.