சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமியுடன் கலந்துபேசி ஒருமித்து கருத்துகள் அடிப்படையில் தொகுதிப் பங்கீடு செய்யப்படும் என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
பட்டுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியது: “தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கவில்லை. அகில இந்திய தலைமை முடிவின்படி, அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமியுடன் கலந்துபேசி, ஒருமித்து கருத்துக்கள் அடிப்படையில் தொகுதிப் பங்கீடு செய்யப்படும்.
எங்களை பொறுத்தவரை யாரையும், எப்போதும் தீவிரமாக எதிர்ப்பு கிடையாது. கொள்கை அளவில் எதிர்க்கிறோமே தவிர, தனிப்பட்ட முறையில் எந்த தாக்குதலும், எந்த எதிர்ப்பும் யார் மீதும் இதுவரை கிடையாது. இனிமேலும் இருக்காது. தவெகவுக்கு பாஜக ஆதரவு தருகிறது என கூற முடியாது. கரூரில் நடந்த சம்பவம் குறித்து நான் பேசினேன். அதிமுக, பாஜக சார்பில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தோம். அதற்கு பதில் அளித்த முதல்வர் பேசும்போது, தவெக தலைவர் 12 மணிக்கு வர வேண்டி இருந்தது. ஆனால், 7 மணிக்கு வந்ததால், தண்ணீர், உணவு முறையாக ஏற்பாடு செய்யவில்லை, சிலர் மயக்கத்தில் இருந்தனர் என பேசினார்.
மேலும், 5 டிஎஸ்பி-க்கள் தலைமையில் 500 போலீஸார் பாதுகாப்புப் பணியில் இருந்தார்கள் என முதல்வர் கூறினார். 12 மணிக்கு விஜய் வருவதாக இருந்த சூழலில், 7 மணிக்கு வந்ததாக முதல்வர் கூறியதில் உண்மை உள்ளது என நான் பேசினேன். ஆனால், கரூரில் ஒரு போலீஸார் கூட கிடையாது. எதிர்க்கட்சிகள் நடத்தும் கூட்டங்களில் போலீஸார் பாதுகாப்பு அளிப்பது இல்லை.
கரூர் சம்பவத்திற்கு பிறகுதான் போலீஸார் பாதுகாப்பிற்கு வருகிறது. எனவே, தமிழக வெற்றிக் கழகத்தை நான் ஆதரித்தும் பேசவில்லை. எதிர்த்தும் பேசவில்லை. பாஜகவை பொறுத்தவரை ஒருவர் பதவிக்கு வந்தால் 3 ஆண்டுகள்தான் பதவி. அந்த பதவியை நீடிப்பு செய்தும் கொடுக்கலாம். கடந்த ஏப்.11-ம் தேதியில் இருந்து தற்போது 6 மாதம் எனது பதவி காலம் முடிந்துள்ளது.
என்னுடைய பதவிக் காலம் இன்னும் இரண்டரை ஆண்டுகள் உள்ளது. ஆனால், அமைச்சர் சேகர் பாபுக்கு பதவிக்கும் திமுக ஆட்சிக்கும் இன்னும் இரண்டரை மாதம் தான் இருக்கிறது. கூட்டணி பலம் என்று ஒன்று இருந்தால், அனைத்து கட்சிகளும் கூட்டணியில் இருந்தபோதும், 2011-ம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்து இருக்க வேண்டும். ஆனால் திமுக ஆட்சிக்கு வரவில்லை.
ஐந்தாண்டு கால ஆட்சியில் மக்களுக்கு வெறுப்புக்குள்ளாகும் போது ஆட்சி மாற்றம் நிச்சயம் வரும். மின் கட்டணம், சொத்து வரி உயர்ந்துள்ளது. மின்சார கட்டணம் மாதம், மாதம் கணக்கீடு செய்யப்படும் என ஆட்சிக்கு வரும் போது கூறினார்கள். ஆனால், செய்யவில்லை.
ரூபாய் ஆயிரம் அறிவித்து விட்டு, எம்.பி தேர்தல் வரும் வரை கொடுக்கவில்லை. எம்.பி தேர்தலில் வெற்றி பெற்ற பிறகுதான் கொடுத்தார்கள். பழைய ஓய்வூதியம் கொண்டு வரப்படும், துாய்மை பணியாளர் நிரந்தரம் செய்வதாக கூறினார். இன்றைக்கு ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்கள், துாய்மை பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் என பலர் போராட்டம் நடத்துகிறார்கள்.
இன்றைக்கு ஒட்டுமொத்தமாக எல்லோரிடம் வெறுப்பை சம்பத்திவிட்டு, ரூ.50 ஆயிரம் கோடி அளவுக்கு அவர்கள் சம்பதித்துள்ளனர். இதை வைத்து இன்றைக்கு விளம்பரம் செய்துக்கொண்டு இருக்கிறார்கள். ஒன்றை சொல்லி விட்டு ஆட்சிக்கு வந்த பிறகு ஏமாற்றம் போது, மக்கள் அதிருப்தியடைகின்றனர்.
தவெக-வில் ஒரு கவுன்சிலர் கூட இல்லை. ஆதவ் அர்ஜூன் பணத்தை வைத்து ஆட்சியை பிடிக்காலம் என நினைக்கிறார். கூட்டம் கூட்டி விடலாம். அதையும் தாண்டி மக்களின் நன்மதிப்பை பெற வேண்டும். ஆட்சிக்கு வர வேண்டும். தமிழகத்தில் 10 வயது சிறுமி முதல் 70 வயது முதியவர் கூட விட்டு வைப்பது இல்லை. திமுக ஆட்சியில் கூட்டுப் பாலியல் வன்கொடுமைகள், பள்ளி வாசலில் கஞ்சா விற்பனை நடக்கிறது. போலீஸாருக்கு யாரும் பயப்படுவது கிடையாது. காவலர் குடியிருப்பில் புகுந்து வெட்டியுள்ளனர். தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு எப்படி இருக்கிறது என்பது மக்களுக்கு தெரியும்” என்று நயினார் நாகேந்திரன் கூறினார்.