புதுடெல்லி: டெல்லியில் தாக்குதல் நடத்துவதற்கு முன்னர் டாக்டர் உமர் முகமது 3 மணி நேரம் காரை விட்டு இறங்காதது ஏன் என்பது குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன.
டெல்லி செங்கோட்டை அருகே கடந்த திங்கட்கிழமை கார் வெடிகுண்டு வெடித்ததில் 13 பேர் உயிரிழந்தனர். இதில் டாக்டர் உமர் முகமது கார் வெடி குண்டை வெடிக்க செய்ததில் உயிரிழந்துள்ளார். இதுகுறித்து தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) தீவிர விசாரணை நடத்தி வருகிறது.
குறிப்பாக, பரிதாபாத்தில் இருந்து டெல்லி வரையில் சுமார் 1000-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமரா பதிவுகளை புலனாய்வுத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர். அதன் விவரங்கள் வருமாறு:
டெல்லிக்குள் காலையில் நுழைந்த ஹூண்டாய் ஐ20 கார் மயூர் விஹார் மற்றும் கன்னாட் பிளேஸ் வழியாக சுற்றியுள்ளது. அப்போது பழைய ஆசப் அலி சாலையில் அரை மணி நேரம் கார் நிறுத்தப்பட்டுள்ளது. அந்த காரில் உமர் முகமது மட்டும் இருக்கிறார். அங்கிருந்து கிளம்பி கடைசியாக செங் கோட்டை பார்க்கிங் பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளது.
டெல்லிக்குள் நுழைந்தது முதல் அவர் கார் ஓட்டி சென்ற பகுதிகள் பல சந்தேகங்களை எழுப்பி உள்ளது. முதலில் உமர் டெல்லி மயூர் விஹார் பகுதிக்கு காரை ஓட்டிச் சென்றுள்ளார். அங்குதான் டெல்லியின் முக்கிய அடையாளமான அக் ஷர்தாம் கோயில் உள்ளது. அங்கிருந்து பழைய டெல்லிக்கு செல்லாமல், திடீரென பாதையை மாற்றி கன்னாட் பிளேஸ் பகுதிக்கு கார் சென்றுள்ளது. இந்த பகுதியும் டெல்லியின் முக்கியமானதாகும். அப்படியானால் கன்னாட் பிளேஸ்தான் தாக்குதலுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட இடமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
டெல்லிக்குள் உமர் கார் 8 மணிக்கு பிறகு நுழைந்துள்ளது. அதில் இருந்து சுமார் 11 மணி நேரத்துக்குப் பிறகு கார் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அதற்கு முன்னதாக செங்கோட்டை பார்க்கிங் பகுதியில் 3 மணி நேரம் கார் நிறுத்தப்பட்டுள்ளது. ஆனால், காரை விட்டு உமர் கீழே இறங்கவில்லை. அத்துடன், காரை தனியாக விட்டு செல்லவும் இல்லை. அவர் காரை விட்டு 3 மணி நேரம் இறங்காதது ஏன் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. யாரிடமாவது தாக்குதலுக்கான உத்தரவு வரும் வரை காத்திருந்தாரா? அல்லது எந்த இடத்தில் தாக்குதல் நடத்துவது என்ற குழப்பத்தில் இருந்தாரா என பல கேள்விகள் எழுந்துள்ளன.
ஹரியானாவில் வெடிபொருள் பறிமுதல், கூட்டாளிகள் கைது, செங்கோட்டைக்கு திங்கட்கிழமை விடுமுறை போன்ற பல காரணங்களால் உமர் பதற்றம் அடைந்து செய்வதறியாமல் இருந்திருக்கிறார். கடைசியில் செங்கோட்டை அருகே காரை வெடிக்க செய்துள்ளார் என்று புலனாய்வு அதிகாரிகள் கூறுகின்றனர். இதுதொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. அதில், உமரை வழிநடத்திய கூட்டாளிகள் யார் என்ற விவரங்கள் தெரிய வரும்.