புதுடெல்லி: டெல்லியில் கடந்த 10-ம் தேதி நிகழ்ந்த கார் குண்டு வெடிப்பில் தொடர்புடையவர்கள் ஹரியானா மாநிலம் பரிதாபாத் அருகே
உள்ள அல் பலா பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரியில் பணிபுரிந்தது தெரியவந்தது.
இதையடுத்து, தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள், அல் பலா மருத்துவக் கல்லூரியை விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்துள்ளனர். அங்கு நேரில் சென்ற அதிகாரிகள் மருத்துவர்கள், பேராசிரியர்கள் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தினர்.
இந்நிலையில், அல் பலா பல்கலைக்கழகத்துக்கு தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகார கவுன்சில் (என்ஏஏசி) அனுப்பியுள்ள நோட்டீஸில் கூறியிருப்பதாவது: அல் பலா பல்கலைக்கழகம் என்ஏஏசி-யிடம் அங்கீகாரம் பெறவில்லை. அங்கீகாரம் கோரி விண்ணப்பிக்கவும் இல்லை. ஆனால், உங்கள் இணையதளத்தில், அல் பலா பல்கலைக்கழகம் அல் பலா அறக்கட்டளையின் அங்கம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இப்பல்கலைக்கழகம், அல் பலா ஸ்கூல் ஆப் இன்ஜினியரிங் (1997 முதல்), பிரவுன் ஹில் காலேஜ் ஆப் இன்ஜினியரிங் அன்ட் டெக்னாலஜி (2008 முதல்), அல் பலா ஸ்கூல் ஆப் எஜுகேஷன் அன்ட் டிரெய்னிங் (2006 முதல்) ஆகிய 3 கல்லூரிகளை நடத்துகிறது என கூறப்பட்டுள்ளது. இது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், அல் பலா பல்கலைக்கழகத்தின் உறுப்பினர் அங்கீகாரத்தை, இந்திய பல்கலைக்கழகங்கள் சங்கம் நேற்று ரத்து செய்தது.