புதுடெல்லி: டெல்லி செங்கோட்டை அருகில் கார் குண்டு வெடிப்பை நிகழ்த்திய மருத்துவர் உமர் நபியின் வீடு இடித்து தரை மட்டமாக்கப்பட்டது.
டெல்லி செங்கோட்டை அருகில் கடந்த திங்கட்கிழமை மாலை ஒரு கார் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதில் அந்த காரை ஓட்டி வந்தவர் உட்பட 13 பேர் உயிரிழந்தனர். 20-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். விசாரணையில், அந்த குண்டு வெடிப்பை நிகழ்த்தியவர் ஜம்மு காஷ்மீரின் புல்வாமா பகுதியை சேர்ந்த மருத்துவர் உமர் முகமது நபி என்பது தெரியவந்தது. டிஎன்ஏ பரிசோதனையில் இது உறுதி செய்யப்பட்டது.
இவர், ஹரியானா மாநிலம் பரிதாபாத்தில் உள்ள அல் பலா பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரியில் பணியாற்றி வந்தார். அங்கு பணியாற்றும் மருத்துவர்கள் சிலருடன் சேர்ந்து நாடு முழுவதும் தொடர் குண்டு வெடிப்புகளை நிகழ்த்த இவர் மிகப்பெரிய சதித் திட்டங்களை தீட்டியது ஒவ்வொன்றாக தெரியவந்தது. இது தொடர்பாக 3 மருத்துவர்கள் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள கொயில் கிராமம், உமர் நபியின் சொந்த ஊராகும். இந்நிலையில் கொயில் கிராமத்தில் உள்ள உமர் நபியின் வீடு நேற்று முன்தினம் இரவு இடித்து தரை மட்டமாக்கப்பட்டது. இரண்டு தளங்களை கொண்ட இந்த வீட்டில் நபி குடும்பத்தினரில் பெரும்பாலானோர் அதாவது பெற்றோர், சகோதரர் உள்ளிட்டோர் வசித்து வந்தனர். வீட்டின் முன்புறம் சிறிய முற்றம் இருந்தது.
இந்நிலையில் அந்த வீட்டில் இருந்தவர்கள் அப்புறப்படுத்தப்பட்டு இரவோடு இரவாக அந்த வீடு வெடிகுண்டு மூலம் தகர்க்கப்பட்டதாக புல்வாமாவில் உள்ள அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர். தீவிரவாத செயல்களில் தொடர்புடையவர்களின் வீடுகள் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் பறிமுதல் செய்யப்படுவது வழக்கமாக உள்ளது. என்றாலும் பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு இவர்களின் வீடு இடித்து தள்ளப்படுகிறது.
கடந்த ஏப்ரல் 24-ம் தேதி பஹல்காம் வழக்கில் தொடர்புடைய அடில் அகமது தோக்கரின் வீட்டை பாதுகாப்புப் படையினர் வெடி வைத்து தகர்த்தனர். இதையடுத்து அடுத்த 3 நாட்களில் மேலும் 9 தீவிரவாதிகளின் வீடு வெடி வைத்து தகர்க்கப்பட்டது.