கொல்கத்தா,
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி கொல்கத்தா ஈடன்கார்டனில் நடைபெற்றது. இதில் தென் ஆப்பிரிக்க அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
அதன்படி சுழலுக்கு சாதகமாக இருந்த பிட்ச்சில் நடைபெற்ற இந்த போட்டியில் இரு அணிகளும் ரன் குவிக்க முடியாமல் திணறின. முதல் இன்னிங்சில் முறையே தென் ஆப்பிரிக்கா 159 ரன்களும், இந்தியா 189 ரன்களும் அடித்தன. பின்னர் 30 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கிய தென் ஆப்பிரிக்க அணி 153 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் இந்திய அணிக்கு 124 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
இதனைதொடர்ந்து 124 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி தென் ஆப்பிரிக்க பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 2-வது இன்னிங்சில் 93 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் தென் ஆப்பிரிக்க அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் மொத்தம் 8 விக்கெட்டுகள் கைப்பற்றிய தென் ஆப்பிரிக்க சுழற்பந்து வீச்சாளர் ஹார்மர் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இதனால் இந்திய அணியின் இந்த தோல்விக்கு சுழலுக்கு சாதகமாக பிட்ச் உருவாக்கப்பட்டதே காரணம் என்று பலர் விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில் கொல்கத்தாவின் பிட்ச் சுழலுக்கு சாதகமாக இருக்க வேண்டும் என்று தாங்கள்தான் கேட்டு வாங்கியதாக இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கம்பீர் தெரிவித்துள்ளார். இருப்பினும் தென் ஆப்பிரிக்க ஸ்பின்னர்களை இந்திய பேட்ஸ்மேன்கள் சரியாக எதிர்கொள்ளாததே தோல்விக்கு காரணம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- “இதுதான் நாங்கள் கேட்ட பிட்ச். ஏற்கனவே நான் சொன்னது போல் கொல்கத்தா மைதான பராமரிப்பாளர் எங்களுக்கு உதவிகரமாக இருந்தார். இது போன்ற ஆடுகளத்தையே நாங்கள் விரும்பினோம். அதுவே எங்களுக்கு சரியாக கிடைத்தது.
ஆனால் நீங்கள் நன்றாக விளையாடாதபோது தோல்வியே கிடைக்கும். இப்போதும் பிட்ச் எப்படி இருந்தாலும் 124 என்பது சேசிங் செய்யக்கூடிய இலக்கு என்று நான் நம்புகிறேன். உங்களிடம் திடமான தடுப்பாட்டம், உறுதி ஆகியவை இருந்தால் இந்த பிட்ச்சிலும் உங்களால் ரன்கள் அடிக்க முடியும். அது அதிரடியாக விளையாடுவதற்கு உதவாமல் இருக்கலாம்.
பிட்ச்சில் பேய் எதுவுமில்லை. ஏனெனில் அதில் அக்சர் படேல், பவுமா, வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் ரன்கள் அடித்தார்கள். ஒருவேளை பிட்ச் சுழலுக்கு சாதகமாக இருக்கிறது என்று நீங்கள் சொன்னால், உண்மையில் அங்கே வேகப்பந்து வீச்சாளர்கள்தான் நிறைய விக்கெட்டுகளை எடுத்துள்ளார்கள்.
கே.எல். ராகுல், பவுமா, வாஷிங்டன் சுந்தர் என தடுப்பாட்டத்தில் கவனம் செலுத்தி ஆடியவர்கள் ரன்கள் எடுத்தார்கள். எனவே உங்களிடம் வலுவான தற்காப்பு இருந்தால், நீங்கள் ரன்கள் எடுக்க முடியாத பிட்ச் இது அல்ல. 40 – 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்திருந்தால் நாங்கள் வெற்றி பெற்றிருப்போம். அழுத்தத்தை உள்வாங்கி பார்ட்னர்ஷிப் அமைத்திருந்தால் பெரிய இலக்கும் சிறிதாக மாறியிருக்கும்” என்று கூறினார்.