திண்டுக்கல்: “கழிவுநீர் கலப்பதால் பச்சை நிறத்துக்கு மாறிய நீர்'' – தவிக்கும் மக்கள்; காரணம் என்ன?

திண்டுக்கல், சீலப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட எஸ். பெருமாள்கோவில்பட்டி மற்றும் ஏ. ஓடைப்பட்டியில் சுமார் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

இங்கு உள்ள செல்லமந்தாடி பெரியகுளம் தண்ணீர் தான் இந்த இரண்டு ஊர் மக்களுக்கு குடிநீர் மற்றும் விவசாயத்திற்கு ஆதாரமாக இருந்து வருகிறது.

இந்நிலையில் திண்டுக்கல் நகர் பகுதியான என்.ஜி. ஓ காலனி மற்றும் நந்தவனப்பட்டி அருகே உள்ள சில தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் பச்சை நிறத்தில் வாய்க்கால் மூலம் பெரியகுளத்தில் உள்ள தண்ணீரில் கலந்து வருகிறது.

இதனால் பெரியகுளத்தின் நீரும் பச்சை நிறத்திற்கு மாறியது. இதனை கண்ட பொதுமக்கள் அதிர்ச்சியில் உறைந்ததோடு இந்த நீரையே குடிப்பதற்காக அச்சமாக உள்ளது என்றனர். இது குறித்து ஊர் மக்கள் கூறுகையில், “ இப்பகுதி மக்கள் அனைவரும் குடிநீருக்காக பயன்படுத்தப்படும் பஞ்சாயத்து கிணறு அந்த பெரியகுளத்தின் அருகில் இருப்பதனால் அந்த கிணற்று நீரும் பச்சை நிறத்தில் மாறி மக்கள் பயன்படுத்த முடியாத அளவிற்கு துர்நாற்றம் வீசுகிறது.

கிணற்று நீர் பச்சை நிறமாக காட்சியளிக்கிறது

மேலும் ஆழ்துளை கிணற்று நீரும் பச்சை நிறமாக மாறி கலங்கலாக வருவதால், இதை குடித்த குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை காய்ச்சல், இருமல் மற்றும் தோல் சம்பந்தமான பல்வேறு நோய் தொற்றுகள் ஏற்படுகின்றன. இந்த நீரினை கொண்டு விவசாயம் கூட செய்ய முடியவில்லை.

ஒரு காலத்தில் கால்நடைகளை ஓட்டி சென்று குளிப்பாட்டி விளையாடிய பெரிய குளம் தண்ணீர் தற்போது கால்களை கூட வைக்க முடியாத அளவிற்கு கழிவு நீர் கலந்து துர்நாற்றம் வீசிகிறது.

தொழிற்சாலை கழிவுநீர் கலக்கும் காட்சி

கிராம சபை கூட்டம் மற்றும் ஊராட்சி அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை” என்று கவலையோடு கூறுகின்றனர்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் விளக்கம் கேட்டபோது, “புகார் குறித்து விசாரணை செய்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.