புதுடெல்லி: டெல்லி செங்கோட்டை அருகே நிகழ்ந்த கார் குண்டுவெடிப்பு ஒரு தற்கொலைப் படைத் தாக்குதல் என்றும் இந்த சதியில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளி ஒருவரை கைது செய்திருப்பதாகவும் என்று தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) தெரிவித்துள்ளது.
டெல்லி செங்கோட்டை அருகே கடந்த 10-ம் தேதி கார் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இதில், 10 பேர் உயிரிழந்தனர், 32 பேர் காயமடைந்தனர். காஷ்மீரைச் சேர்ந்த மருத்துவரான உமர் முகமது நபி என்பவர் காரை ஓட்டிச் சென்று வெடிவிபத்தை நிகழ்த்தினார். இந்த வெடி விபத்து குறித்து முதலில் டெல்லி போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். பின்னர், இந்த வழக்கை என்ஐஏவுக்கு மாற்றி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது. இதையடுத்து, என்ஐஏ, 10 பேர் கொண்ட சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்து, தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறது.
இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக என்ஐஏ அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், “டெல்லி செங்கோட்டை அருகே கடந்த 10-ம் தேதி 10 பேர் உயிரிழக்கவும், 32 பேர் படுகாயமடையவும் காரணமான கார் குண்டுவெடிப்பில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியை என்ஐஏ கைது செய்துள்ளது. இது இந்த வழக்கில் மிக முக்கிய திருப்புமுனையாகும். காஷ்மீரின் பாம்பூர் அருகே உள்ள சம்பூரா எனும் பகுதியைச் சேர்ந்த அமீர் ரஷீத் அலி என்ற அந்த நபரை, என்ஐஏ அதிகாரிகள் டெல்லியில் கைது செய்தனர். டெல்லி போலீஸாரிடம் இருந்து வழக்கு விசாரணையை பெற்றுக்கொண்ட பிறகு என்ஐஏ நடத்திய மிகப் பெரிய தேடுதல் வேட்டையை அடுத்து இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அமீர் ரஷித் அலிதான் காரை தன் பெயரில் வாங்கியுள்ளார். குண்டுவெடிப்புக்குப் பயன்படுத்தப்பட்ட காரை வாங்குவதற்கு இவர் டெல்லி வந்துள்ளார். மேலும், தற்கொலைப்படைத் தாக்குதலை நிகழ்த்திய மருத்துவர் உமர் முகமது நபியுடன் இணைந்து இந்த குண்டுவெடிப்பை நிகழ்த்த இவர் சதி செய்துள்ளார். உமர் முகமது நபி, ஃபரிதாபாத்தில் உள்ள அல் பலா பல்கலைக்கழகத்தில் பொது மருத்துவத் துறையில் உதவிப் பேராசிரியராக இவர் பணியில் இருந்துள்ளார் என்பதை என்ஐஏ உறுதிப்படுத்தியுள்ளது.
உமர் முகமது நபிக்குச் சொந்தமான மற்றொரு காரை என்ஐஏ பறிமுதல் செய்துள்ளது. இந்த வழக்கு தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளும் நோக்கில் அந்த கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. குண்டுவெடிப்பில் காயமடைந்தவர்கள் உட்பட 73 சாட்சிகளிடம் என்ஐஏ விசாரணை நடத்தியுள்ளது.
டெல்லி போலீஸ், ஜம்மு காஷ்மீர் போலீஸ், ஹரியானா போலீஸ், உத்தரப் பிரதேச போலீஸ், வேறு சில அரசு ஏஜென்சிகள் ஆகியோருடன் என்ஐஏ ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறது. இந்த குண்டுவெடிப்பின் பின்னணியில் உள்ள பெரிய சதித்திட்டத்தைக் கண்டறியவும், வழக்கில் தொடர்புடைய மற்றவர்களை அடையாளம் காணவும் பல தடயங்களை என்ஐஏ தேடி வருகிறது.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.