சென்னை: சென்னை எழும்பூரில் உள்ள ஆவணக் காப்பகத்தின் அரிய ஆவணங்கள் உதவியுடன் தமிழக வரலாறு குறித்து ஆய்வு செய்ய மாதம்தோறும் ரூ.50 ஆயிரம் உதவித் தொகை வழங்கப்படும். இதற்கு முதுகலை பட்டதாரிகள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் விண்ணப்பிக்கலா்ம் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அமைச்சர் கோவி.செழியன் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை எழும்பூரில் இயங்கி வரும் பழமைமிகுந்த தமிழ்நாடு ஆவணக்காப்பகத்தில் மூன்று நூற்றாண்டுகளுக்கு முந்தைய அரசுத் துறை ஆவணங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. “மெட்ராஸ் ரெக்கார்ட் ஆபீஸ்” என்ற பெயரில் அழைக்கப்பட்ட இக்காப்பகம் 1909 முதல் தற்போதுள்ள ஆவணக் காப்பகக் கட்டிடத்தில் இயங்கி வருகிறது.
இங்கு 1633-ம் ஆண்டு முதலான புத்தகங்களும், 1670-ம் ஆண்டு முதலான பழமையான ஆவணங்களும் பராமரிக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தின் வரலாற்றினை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கில் 1973-ம் ஆண்டு தொடங்கப்பட்ட தமிழ்நாடு வரலாற்று ஆராய்ச்சி மன்றம் மாறிவரும் காலத்திற்கேற்ப மீளுருவாக்கம் செய்யப்படும் என்றும், ஆண்டுதோறும் 10 முதல் 15 ஆய்வுகள் வரை மேற்கொள்ளப்படும் என்றும் சட்டப்பேரவையில் முதல்வரால் அறிவிக்கப்பட்டது.
அதன்படி தமிழ்நாடு வரலாற்று ஆராய்ச்சி மன்றம் மீளுருவாக்கம் செய்யப்பட்டும், 20 நபர்களுக்கு ஆராய்ச்சி உதவித் தொகை வழங்கப்பட்டு வரலாற்று ஆய்வுகள் மேற்கொள்ளவும் ஆணைகள் வெளியிடப்பட்டன. தமிழ்நாடு ஆவணக்காப்பகத்தின் அரிய ஆவணங்களை ஆராய்ந்து தமிழகத்தின் பெருமைமிகு வரலாற்றை வெளிகொண்டு வரும் வகையிலான ஆராய்ச்சியை ஓராண்டுக்கு மாதம் ரூ. 50,000 உதவித்தொகையுடன் மேற்கொள்வதற்கு முதுகலை பட்டதாரிகள் அல்லது தனிநபர் ஆராய்ச்சியாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதற்கான விண்ணப்பப் படிவம், தகுதி மற்றும் பிற விவரங்கள் www.tamilnaduarchives.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. தகுதியுள்ள ஆராய்ச்சியாளர்கள் இந்த இணையதளத்தை பயன்படுத்தி நவம்பர் 28-ம் தேதி வரை இணையவழியில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்கள் இணையவழி மட்டுமே பெறப்படும்.” இவ்வாறு அமைச்சர் கூறியுள்ளார்.