பாட்னா: பிஹார் தேர்தலில் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் படுதோல்வி அடைந்தது. இத்தோல்வி அவரது குடும்பத்தையும் பாதித்துள்ளது.
லாலுவுக்கு சிறுநீரகம் தானம் செய்தவரும் அவரது இரண்டாவது மகளுமான ரோகிணி ஆச்சார்யா, தனது தம்பி தேஜஸ்வியின் கூட்டாளிகளால் தாம் பெற்றோர் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டதாக கடந்த ஞாயிற்றுக்கிழமை குற்றம் சாட்டினார்.
இதற்கு முன் லாலுவின் மூத்த மகன் தேஜ் பிரதாப் கடந்த மே மாதம் கட்சியில் இருந்தும் குடும்பத்தில் இருந்தும் நீக்கப்பட்டார். தனிக்கட்சி தொடங்கி பிஹார் தேர்தலில் 22 தொகுதிகளில் போட்டியிட்ட அவர் அனைத்து இடங்களிலும் தோல்வி அடைந்தார்.
இந்நிலையில் தேஜ் பிரதாப் வெளியிட்ட சமூக வலைதளப் பதிவில், “எனது சகோதரிக்கு ஏற்பட்ட அவமானத்தை எந்த சூழ்நிலையிலும் நான் பொறுத்துக்கொள்ள மாட்டேன். துரோகிகள் தங்கள் தவறுகளுக்கு விலை கொடுக்க வேண்டியிருக்கும். எனது பெற்றோரை மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் அழுத்தத்தில் வைத்திருக்க சிலர் முயற்சிப்பதாக கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் பாரபட்சமற்ற விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று பிரதமர் மோடி, அமைச்சர் அமித் ஷா மற்றும் பிஹார் அரசை கேட்டுக்கொள்கிறேன்’’ என்று கூறியுள்ளார்.