சபரிமலை: சபரிமலையில் ஏற்பட்டுள்ள கடும் நெரிசலில் சிக்கி குழந்தைகள், முதியோர் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். வரிசையில் நீண்ட நேரம் காத்திருந்த மூதாட்டி ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்தார்.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆன்லைன் மூலம் 70 ஆயிரம் பேரும், ஸ்பாட் புக்கிங் மூலம் 20 ஆயிரம் பேரும் என மொத்தம் 90 ஆயிரம் பக்தர்கள் தினமும் அனுமதிக்கப்படுவர் என்று தேவசம் போர்டு தெரிவித்துள்ளது. ஆனால் ஸ்பாட் புக்கிங்கில் கட்டுப்பாடின்றி பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். இதனால் நெரிசல் ஏற்பட்டு பம்பை, மரக்கூடம் உள்ளிட்ட பல பகுதிகளிலும் பக்தர்கள் வெகுநேரம் நிறுத்தி வைக்கப்பட்டு பின்பு அனுமதிக்கப்படுகின்றனர். 6 மணி நேரத்துக்கும் மேல் காத்திருக்கும் நிலை ஏற்படுகிறது. அதுவரை குடிநீர், கழிப்பிட வசதி இல்லாததால் பக்தர்கள் பெரும் பரிதவிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். இத்துடன் கடும் நெரிசலும் ஏற்படுவதால் பலருக்கும் மூச்சுத்திணறல் ஏற்பட்டு வருகிறது.
இந்நிலையில் கட்டுங்கடங்காத கூட்டத்தால் அப்பாச்சிமேடு பகுதியில் மூதாட்டி ஒருவர் உயிரிழந்தார். போலீஸார் உடலை மீட்டு விசாரணை நடத்தினர். இதில் இறந்தவர் கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே கோகிலாண்டி பகுதியைச் சேர்ந்த சதி (58) என்பது தெரியவந்தது. அவர் மாரடைப்பினால் இறந்ததாக மருத்துவத் துறையினர் தெரிவித்தனர். கடும் நெரிசலால் குழந்தைகளும், முதியோர்களும் அதிக சிரமங்களை சந்தித்து வருகின்றனர். இதனால் பக்தர்கள் பலரும் சபரிமலை செல்லாமல் பம்பா கணபதி கோயிலுடன் திரும்பிச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து உப்பார்பட்டியைச் சேர்ந்த பக்தர் மணிகண்டன் கூறும்போது, ‘‘ஸ்பாட் புக்கிங்கை உடனடியாக குறைக்க வேண்டும் அல்லது நிறுத்த வேண்டும். அதுதான் இவ்வளவு பிரச்சினைக்கும் காரணம். லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து செல்லக்கூடிய அளவில் இங்கு எந்த வசதியும் ஏற்படுத்தப்படவில்லை. பெரியளவில் அசம்பாவிதம் ஏற்படுவதற்கு முன்பு கூட்டத்தை கட்டுப்படுத்த உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.
தேவசம் போர்டு தலைவர் ஜெயகுமார் கூறியதாவது: சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. கூட்டத்தை கட்டுப்படுத்த போதிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ஒரு நிமிடத்துக்கு 90 பேர் பதினெட்டாம் படியில் ஏறுகின்றனர். தினமும் 90,000 பக்தர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும். ஆனால் லட்சத்துக்கும் மேற்பட்டோர் குவிந்துள்ளனர். இதுதொடர்பாக மாநில காவல் துறைக்கு கடிதம் எழுதி உள்ளேன். மத்திய பாதுகாப்புப் படை வீரர்கள் விரைவில் சபரிமலை வந்து சேருவார்கள் என்று எதிர்பார்க்கிறோம். கூட்ட நெரிசலை சமாளிக்க சுவாமியை தரிசிக்கும் நேரம் அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. இவ்வாறு ஜெயகுமார் தெரிவித்தார்.
கேரள காவல் துறை ஏடிஜிபி ஸ்ரீஜித் கூறியதாவது: செவ்வாய்க்கிழமை மதியம் 12 மணி நிலவரப்படி 1.96 லட்சம் பேர் சுவாமியை தரிசனம் செய்துள்ளனர். கடந்த சீசனைவிட தற்போது சபரிமலையில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. பக்தர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த உடனடி தினசரி தரிசன பதிவு 20,000 ஆக குறைக்கப்பட்டு உள்ளது. கூடுதல் போலீஸார் குவிக்கப்பட்டு உள்ளனர். மத்திய பாதுகாப்புப் படை வீரர்கள் செவ்வாய்க்கிழமை இரவு வந்து சேருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர்களும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். பக்தர்கள் விதிமுறைகளை கடைப்பிடித்தால் நெரிசலை கட்டுப்படுத்த முடியும். இவ்வாறு ஏடிஜிபி தெரிவித்தார்.