புதுடெல்லி,
டெல்லி செங்கோட்டை அருகே கடந்த 10-ந் தேதி நடந்த கார் வெடிப்பு சம்பவம் பயங்கரவாத சதியில் நடந்துள்ளது என்பதை புலனாய்வு அதிகாரிகள் கண்டுபிடித்து உள்ளனர். இது தொடர்பாக பலர் கைது செய்யப்பட்டு உள்ளனர். விசாரணை தீவிரமாக நடந்து வருகிறது.இந்த சம்பவத்தில் உயிர்ப்பலி எண்ணிக்கை முதலில் 8, பின்னர் 10, அதன்பின்னர் 13 என உயர்ந்து கொண்டே வந்தது.
இந்த நிலையில் நேற்று இந்த எண்ணிக்கை 15 ஆக அதிகரித்தது. நேற்று முன்தினம் இரவு லுக்மான் (வயது 50) என்பவரும், நேற்று வினய் பதக் (50) என்பவரும் சிகிச்சை பலன் இன்றி இறந்தனர். இவர்கள் லோக் நாயக் ஜெயப்பிரகாஷ் ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.இதற்கிடையே குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு காரை வழங்கியதாக அமீர் ரஷீத் அலி என்பவர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார். சம்பவத்தில் வெடித்துச் சிதறிய கார், இவரது பெயரில்தான் இருந்தது.
இவர் காரை வழங்கியதோடு மட்டுமல்லாமல், பயங்கரவாதிகளோடு சதித்திட்டம் தொடங்கியபோதே தொடர்பில் இருந்துள்ளார். ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த இவர் கார் வாங்குவதற்காக டெல்லிக்கு வந்து சென்றிருக்கிறார். மேலும் தற்கொலை பயங்கரவாதி டாக்டர் அமர் தங்குவதற்கு இடமும் வழங்கியதாக தெரிகிறது.
இந்தநிலையில் வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட அவரை தேசிய புலனாய்வு (என்.ஐ.ஏ.) அதிகாரிகள் நேற்று டெல்லி பட்டியாலா மாவட்ட முதன்மை அமர்வு கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்கள். அப்போது அவரை காவலில் எடுத்து விசாரிக்கவும் மனு தாக்கல் செய்யப்பட்டது.இதனை விசாரித்த நீதிபதி 10 நாள் காவலில் வைத்து விசாரணை நடத்த அனுமதி அளித்து உத்தரவிட்டனர். இந்த உத்தரவின்பேரில் புலனாய்வு முகமை அதிகாரிகள் அமீர் ரஷீத் அலியை விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.
முன்னதாக அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட இருப்பதை முன்னிட்டு கோர்ட்டு வளாகத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டது. குண்டு வெடிப்பில் அரியானா மாநிலத்தின் அல்பலா பல்கலைக்கழக டாக்டர்கள் பலருக்கு தொடர்பு இருப்பதை புலனாய்வு அதிகாரிகள் கண்டுபிடித்தனர். அந்த டாக்டர்களில் பலர் கைது செய்யப்பட்டு உள்ளனர். முக்கிய குற்றவாளி உமர் முகமது சம்பவ இடத்திலேயே பலியாகி விட்டார். இதன் மீதான விசாரணை தொடர்ந்து கொண்டிருக்கிறது.
இதற்கிடையே அல்பலா பல்கலைக்கழகத்தின் இணையப்பக்கத்தில் அங்கீகாரம் தொடர்பாக தவறான தகவல்கள் கொடுக்கப்பட்டிருந்ததாக கூறி பல்கலைக்கழக மானியக்குழு மற்றும் நாக் கமிட்டி ஆகியவை விளக்கம் கேட்டன. ஏற்கனவே பயங்கரவாத சம்பவ விசாரணையில் பல்கலைக்கழகமும் உட்படுத்தப்பட்டது. இந்த நிலையில் அங்கீகாரம் தொடர்பான முரண்பாடுகளிலும் சிக்கியதைத் தொடர்ந்து டெல்லி குற்றப்பிரிவு போலீசார் அந்த பல்கலைக்கழகம் மீது 2 தனித்தனி வழக்குகளை பதிவு செய்தனர்.
இந்த வழக்குகளின் அடிப்படையில் அல்பலா பல்கலைக்கழகத்துக்கு டெல்லி குற்றப்பிரிவு போலீஸ் சம்மன் அனுப்பி உள்ளது. 2 வழக்குகளின் பேரிலும் தனித்தனி சம்மன்கள் அனுப்பப்பட்டு உள்ளன. பல்கலைக்கழகத்தின் தலைவர் ஜாவேத் அகமது சித்திக் இது தொடர்பாக போலீசில் ஆஜராகி விளக்கம் அளிக்க கோரப்பட்டு உள்ளது.
இந்தநிலையில், டெல்லி கார் குண்டு வெடிப்பு பயங்கரவாதி உமர் பணியாற்றிய அல்பலா பல்கலை.யில் நடத்தப்பட்ட சோதனையின் போது சேகரிக்கப்பட்ட ஆதாரங்கள், விசாரணை அடிப்படையில் அல்பலா குழும தலைவர் ஜவாத் அகமது சித்திக்கை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது. பரிதாபாத்தில் உள்ள அல்பலா பல்கலைக்கழகம், யுஜிசி அங்கீகாரத்தைப் பொய்யாகக் கோரியுள்ளது. அல்பலா பல்கலைக்கழகம் யுஜிசி மானியங்களைப் பெற தகுதியற்றது என அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.