இராமேஸ்வரத்தில் பள்ளிக்கு சென்றுக்கொண்டிருந்த 12-ம் வகுப்பு மாணவியை இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. காதலிக்க மறுத்ததால் இளைஞர் கொலை செய்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் திமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கின்றனர்.
எடப்பாடி பழனிசாமி வெளியிட்டிருக்கும் பதிவில், ” இராமேஸ்வரத்தில் தன்னை காதலிக்க மறுத்த 12-ம் வகுப்பு மாணவியை இளைஞர் கத்தியால் குத்திப் படுகொலை செய்ததாக வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.

காலை நேரத்தில் பள்ளிக்கு செல்லும் மாணவிக்குக் கூட பாதுகாப்பு இல்லாத ஒரு அவல நிலைக்கு யார் பொறுப்பு? பட்டப்பகலில் பள்ளி மாணவியைக் கொலை செய்யும் அளவிற்கு, குற்றவாளிக்கு இவ்வளவு துணிச்சல் எங்கிருந்து வந்தது? ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சியில், சட்டம் ஒழுங்கையும் பெண்கள் பாதுகாப்பையும் முழுமையாக குழி தோண்டி புதைத்துவிட்டதே இத்தகைய கொடூரக் குற்றச் செயல்களுக்கு முழுமுதற் காரணம்.
ஸ்டாலின் அவர்களே- “உங்கள் ஆட்சியில் அடுத்த நிமிடம் பாதுகாப்பாக இருக்க முடியுமா?” என்ற அச்சத்துடனே ஒவ்வொரு பொழுதையும் பெண்கள் கடக்க வேண்டிய அவலச் சூழல், தமிழ்நாட்டிற்கு தலைகுனிவு இல்லையா? இதற்கு நீங்கள் வெட்கித் தலைகுனிய வேண்டாமா?
பெண்ணியம் போற்றும் தமிழகத்தை, பெண்கள் பாதுகாப்பாக நடமாடவே முடியாத மாநிலமாக மாற்றிவிட்டீர்களே- இது உங்களை உறுத்தவில்லையா? ராமேஸ்வரம் பள்ளி மாணவியைக் கொலை செய்த குற்றவாளிக்கு உச்சபட்ச சட்டப்பூர்வ தண்டனை கிடைப்பதை உறுதி செய்யவேண்டும் என ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்” என்று பதிவிட்டிருக்கிறார்.

அன்புமணி வெளியிட்டிருக்கும் பதிவில், ” இராமேஸ்வரத்தில் காதலிக்க மறுத்த மாணவி கத்தியால் குத்தி படுகொலை: திமுக ஆட்சியில் சமூகவிரோதிகளைத் தவிர யாருக்கும் பாதுகாப்பில்லை! இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரத்தில் காதலிக்க மறுத்த12-ஆம் வகுப்பு மாணவி அதே பகுதியைச் சேர்ந்த முனியராஜ் என்ற மனித மிருகத்தால் கொடூரமான முறையில் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்.
மாணவியை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். இராமேஸ்வரத்தை அடுத்த சேராங்கோட்டையைச் சேர்ந்த மாணவி ஷாலினியை அதே பகுதியைச் சேர்ந்த முனியராஜ் என்பவர் தம்மை காதலிக்கும்படி தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்திருக்கிறார். ஆனால், அவரைக் காதலிக்க ஷாலினி மறுத்து விட்டதால் ஆத்திரமடைந்த முனியராஜ், இன்று காலை மாணவி ஷாலினி பள்ளிக்கு செல்லும் வழியில் மறித்து கத்தியால் குத்தி படுகொலை செய்திருக்கிறார்.
பள்ளி செல்லும் மாணவிகளும், அலுவலகம் செல்லும் இளம்பெண்களும் தொடர்ந்து பாலியல் சீண்டல்களுக்கு ஆளாவதாலும், காதல் தொல்லைகளுக்கு உட்படுத்தப்படுவதாலும் பள்ளி மற்றும் அலுவலக நேரங்களில் பேருந்து நிறுத்தங்களிலும், பள்ளிகள் மற்றும் அலுவலகங்கள் அமைந்துள்ள பகுதிகளிலும் காவல்துறை பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. அதை செவிமடுக்க திமுக அரசு தவறியதன் விளைவாகத் தான் ஓர் அப்பாவி மாணவி கொடூரமாக படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இதற்கு திமுக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும். திமுக ஆட்சிக்கு வந்த நாளில் இருந்தே பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட எவருக்கு பாதுகாப்பில்லாத நிலை தான் நிலவி வருகிறது. ஆளுங்கட்சியினருக்கு துணை போகும் சமூக விரோதிகள் மட்டும் தான் இந்த ஆட்சியில் மிகவும் பாதுகாப்பாக இருக்கின்றனர். திமுக ஆட்சியில் எத்தகைய கொடூர குற்றங்களை செய்தாலும் தப்பி விடலாம் என்ற துணிச்சல் தான் இத்தகைய கொலைகளுக்கு காரணம் ஆகும்.

திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் 2021, 2022, 2023 ஆகிய 3 ஆண்டுகளில் மட்டும் மொத்தம் 217 குழந்தைகள் படுகொலை செய்யப்பட்டிருக்கின்றனர்; அவர்களில் 7 குழந்தைகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளனர். அதேபோல், திமுக ஆட்சியில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் 60.66 விழுக்காடும், போக்சோ வழக்குகளின் எண்ணிக்கை 52.30 விழுக்காடும் அதிகரித்துள்ளன.
இது தான் திமுக ஆட்சியின் சாதனை ஆகும். இராமேஸ்வரத்தில் மாணவி ஷாலினியை கொடூரமாக படுகொலை செய்த முனியராஜை சட்டத்தின் முன் நிறுத்தி கடுமையான தண்டனை பெற்றுத் தர வேண்டும். மாணவி ஷாலினியின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். திமுக ஆட்சியின் எஞ்சியுள்ள சில வாரங்களிலாவது பெண்களும், குழந்தைகளும் பாதுகாப்பாக நடமாடும் சூழலை உருவாக்க வேண்டும்” என்று கண்டனம் தெரிவித்திருக்கிறார்.