இந்தியன் பிரீமியர் லீக் 2008ம் ஆண்டு தொடங்கப்பட்டதிலிருந்து, எண்ணற்ற வீரர்கள் வந்து சென்றாலும், சில வீரர்கள் மட்டும் தங்கள் அசைக்க முடியாத திறமையாலும், அபாரமான உடல் தகுதியாலும் தொடர்ந்து விளையாடி வருகின்றனர். 17 வருடங்களாக ரசிகர்களை மகிழ்வித்து வரும் இந்த அனுபவ சிங்கங்கள், ஐபிஎல் வரலாற்றில் அதிக போட்டிகளில் விளையாடிய வீரர்கள் என்ற பெருமையை பெற்றுள்ளனர். அந்த பட்டியலில், தோனி முதலிடத்தில் கம்பீரமாக நிற்க, அவருக்கு பின்னால் சில முக்கிய வீரர்கள் இடம்பிடித்துள்ளனர்.
Add Zee News as a Preferred Source

முதலிடத்தில் ‘தல’ தோனி
ஐபிஎல் என்றாலே பலருக்கும் நினைவுக்கு வரும் முதல் பெயர் எம்.எஸ். தோனி. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆன்மாவாக விளங்கும் இவர், ஐபிஎல் வரலாற்றில் அதிக போட்டிகளில் விளையாடிய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். இதுவரை 278 ஐபிஎல் போட்டிகளில் களமிறங்கியுள்ள தோனி, தனது கூர்மையான கேப்டன்ஷிப் மூலம் சென்னை அணிக்கு பல கோப்பைகளை பெற்று தந்துள்ளார். 42 வயதை கடந்தும், அவரது விக்கெட் கீப்பிங் திறமையும், ஃபினிஷிங் ஸ்டைலும் இன்றளவும் இளம் வீரர்களுக்கு ஒரு பாடமாகவே உள்ளது.
இரண்டாவது இடத்தில் ‘ஹிட்மேன்’ ரோஹித்
இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில், ‘ஹிட்மேன்’ என்று அழைக்கப்படும் ரோஹித் சர்மா உள்ளார். டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்காக தனது ஐபிஎல் பயணத்தை தொடங்கி, பின்னர் மும்பை இந்தியன்ஸ் அணியின் தவிர்க்க முடியாத சக்தியாக உருவெடுத்தார். இதுவரை 272 போட்டிகளில் விளையாடியுள்ள ரோஹித், தனது அதிரடி பேட்டிங் மற்றும் சாதூர்யமான கேப்டன்ஷிப் மூலம் மும்பை அணிக்கு ஐந்து முறை கோப்பையை வென்று கொடுத்துள்ளார்.
மூன்றாவது இடத்தில் ‘கிங்’ கோலி
‘ரன் மெஷின்’ விராட் கோலி, 267 போட்டிகளில் விளையாடி இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளார். 2008-ம் ஆண்டு முதல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக மட்டுமே விளையாடி வரும் இவர், ஒரு அணிக்காக அதிக போட்டிகளில் விளையாடிய வீரர் என்ற பெருமைக்குரியவர். ஐபிஎல் தொடரில் அதிக ரன்களை குவித்த வீரர் என்ற மகத்தான சாதனையையும் கோலி தன்வசம் வைத்துள்ளார்.
முதல் ஐந்து இடங்களில் உள்ள மற்ற வீரர்கள்
இந்திய அணியின் அனுபவமிக்க விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனான தினேஷ் கார்த்திக், 257 போட்டிகளில் விளையாடி நான்காவது இடத்தில் இருக்கிறார். கொல்கத்தா, மும்பை, பெங்களூரு என பல அணிகளுக்காக தனது பங்களிப்பை அளித்துள்ள கார்த்திக், ஒரு சிறந்த ஃபினிஷராக அறியப்படுகிறார். இவரை தொடர்ந்து, சிஎஸ்கே அணியின் மற்றொரு தூணான ரவீந்திர ஜடேஜா, 254 போட்டிகளுடன் ஐந்தாவது இடத்தில் உள்ளார். இந்த வீரர்களின் நீண்ட கால பயணம், அவர்களின் கடின உழைப்புக்கும், கிரிக்கெட் மீதான அர்ப்பணிப்புக்கும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும்.
About the Author
RK Spark