‘பேய் இருக்க பயமேன்’ படத்தை இயக்கிய சீ.கார்த்தீஸ்வரன் இயக்கத்தில் டார்க் காமெடி படமாக வெளியாக இருக்கும் திரைப்படம் ‘நிர்வாகம் பொறுப்பல்ல’.
இந்தப் படத்தில் லிவிங்ஸ்டன், இமான் அண்ணாச்சி, பிளாக் பாண்டி போன்றோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.
இப்படத்தின் இசை வெளியீடு மற்றும் டிரெயிலர் வெளியீட்டு விழா சென்னையில் இன்று (நவ,20)நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு பேசிய பிளாக் பாண்டி, ” என்னுடைய மனைவியும், நானும் இரண்டாவது குழந்தை பிறக்கும் சமயத்தில் மருத்துவமனை சென்றிருந்தோம்.
மருத்துவமனையில் பணம் கட்டுவதற்காக 27,000 வைத்திருந்தேன். நான் போனில் ஒருவரிடம் பேசிக்கொண்டிருக்கும்போது எனது மனைவி பேங்கில் இருந்து ஒரு மெசேஜ் வருகிறது என்கிறார்.
ஆதார் கார்ட் வெரிஃபிக்கேஷன் கேட்கிறது என்றார். நான் வெயிட் பண்ணு என்று சொன்னேன். ஆனால் அந்த இடைவெளியில் எனது மனைவி அந்த ஃபைலை ஒப்பன் செய்துவிட்டார்.
அந்த ஃபைலை ஓப்பன் செய்த அடுத்த நொடியில் என்னுடைய பேங்க் அக்கவுன்ட்டில் இருந்து 25,000 ரூபாயை எடுத்துக்கொண்டார்கள். அதனால் எனக்கும், மனைவிக்கும் சண்டை வந்து மன உளைச்சல் ஆகிவிட்டது.
பணம் போய்விட்டதே என்று என் மனைவி கதறி அழுதார். பணம் காணாமல் போனதை நினைத்து கவலைப்படுவதா? இல்லை மனைவிக்கு ஆறுதல் சொல்லுவதா? என்றே தெரியவில்லை.

போலீஸில் புகார் கொடுத்தோம். ஆனால் அவர்கள் சரியான நடவடிக்கை எடுக்கவில்லை. எங்களை மாதிரி பாமர மக்களுக்கு அந்த பணம் கிடைக்கவில்லை என்றால் எவ்வளவு கஷ்டம் என்பது எங்களுக்குத் தான் தெரியும்.
வாட்ஸ் அப்பில் ‘APK FILE’ என ஒன்று வருகிறது. அப்படி வந்தால் அதனை க்ளிக் செய்யாதீர்கள். பணம், புகைப்படங்களைப் பொறுத்தவரை எல்லாரும் கொஞ்சம் கவனமாக இருப்போம். இந்தப் படத்தில் ஏமாற்றும் கும்பல் பற்றி கார்த்தீஸ்வரன் சொல்லியிருக்கிறார்” என்று பேசியிருக்கிறார்.